இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு , இன்று திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் , உள்நாட்டலுவல்கள் , மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பி.கே.மாயாதுன்னவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் , 1952 முதல் 1972 வரை இலங்கையின் மகாராணியாகவும் இருந்து இரண்டாம் எலிசபத் மகாராணியின் அரச இறுதிக் கிரிகைகள் இடம்பெறவுள்ள இன்றைய தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பதன் பொருட்டு அரச அலுவலகங்களுக்கு விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இது தடையாக இருத்தலாகாது என்று பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டினைப் பெறுவதற்கு ஏற்கனவே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அன்றைய தினம் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.