நாட்டுக்குள் போதைவஸ்து கடத்தலை கட்டுப்படுத்தும் பொறுப்பும் பாதாள கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
விசேட அதிரடிப்படையினரை நினைவு கூரும் 33 வது வருட நினைவு தினம் கட்டுக்குருந்தை பயிற்சிக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை போதைவஸ்து கடத்தலுக்கான ஒரு மத்திய நிலையமாக மாறி வருகிறது. போதைவஸ்து கடத்தல் ஊடாக பெருந்தொகையான பணம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று வருகின்றன. இதனூடாக பாதாள உலகம் வலுப்பெறுவதுடன் பயங்கரவாதமும் பரவக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே, இவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு மிக முக்கிய நடவடிக்கை எடுக்கக்கூடிய நபர்களாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை குறிப்பிடலாம். எனவே போதைவஸ்து கடத்தல் மற்றும் வர்த்தகம் போன்ற சவால்களை அதிரடிப் படையினரிடமே ஒப்படைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச்செயல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்பு மற்றும் போதைவஸ்து ஒழிப்பு பிரிவாக்கப்பட்டுள்ளது. இதன் முழுப்பொறுப்பும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இவ்விசேட பிரிவுக்கு எவரும் தலையிடவோ அல்லது எவரேனும் அழுத்தம் கொடுக்கவோ முடியாது. போதைவஸ்து ஒழிப்பு, பாதாள உலக குழுவினரை இல்லாதொழித்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் இந்தப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்கும் பொறுப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு மிக வெற்றிகரமாக செய்துமுடித்திருக்கிறார்கள். இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரிடம் போதைவஸ்து கடத்தல் என்கின்ற நாட்டின் புற்றுநோயை வேரோடு பிடுங்கி எறியவும், பாதாள உலக கும்பல்களை அடியோடு ஒழிக்கவும் உள்ள சவாலை விசேட அதிரடிப்படையினரிடமே ஒப்படைப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் அன்றும் இன்றும் வெவ்வேறல்ல. அன்று பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக செயற்பட்டன. ஆனால், இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டாலும் சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் அதிரடிப்படையினரை தயார்படுத்தல் வேண்டும். பொலிஸ் விசேட அதிரடிப் படையை நவீனமயப்படுத்தப்படவேண்டும்.
நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் வேண்டும். இதனூடாக இனிவரும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் அவர்களை தயார் படுத்தல் அமரர் ரவி ஜயவர்த்தனவின் எண்ணக்கருவில் உருவான அவரது தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அவரது குழந்தையைப் போன்று பராமரித்து வந்தார். முன்னாள் ஜனாதிபதி ஒருவருடைய மகனாக இருந்தும் அவர் என்றுமே தன் முகத்தை காட்டியதில்லை. மேடைகளில் ஏறியதுமில்லை. அர்ப்பணிப்புடன் விசேட அதிரடிப் படையை அவர் கட்டியெழுப்பினார்.
விசேட குழுவினரூடாக இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. கட்டுக்குருந்தை பயிற்சிப் பாடசாலை அன்று போல் இன்றும் தெற்காசியாவில் சிறந்த பயிற்சி நிலையமாக இருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது பொலிஸ் விசேட அதிரடிப் படை உருவாக்கத்தின் முக்கிய நபராகக் கருத்தப்படும் அமரர் ரவி ஜயவர்த்தனவின் உருவப்படமொன்றையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அவரது மனைவி ஜலனி ஜயவர்த்தன, மகன்களான அம்ரிஜ், ருக்ஷான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.