விக்கியை உடன் பதவி நீக்குங்கள்! – வடமாகாண சபையை கலையுங்கள்! ஜனாதிபதி, பிரதமருக்கு அழுத்தம்
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய பேரணி இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது என்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த அழுத்தத்தைக் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர் என்று அறியக்கிடைக்கின்றது.
யாழ். பேரணியை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச்சேர்ந்த இரு பிரிவினரும் ஒருமித்த நிலையில் எதிர்ப்பதால் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரிடம் மேற்படி அழுத்தத்தை முன்வைக்கவுள்ளனர்.
நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும்இந்தக் குழுவினர் அவருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்குதல் அல்லது மாகாண சபையைக் கலைக்கும் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர் என்று அறியக் கிடைக்கின்றது.
இருப்பினும், வடக்கு மாகாண சபை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தை மீறி அதில் கையடிப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் பிரதமரும் ஜனாதிபதியும் உள்ளனர் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், மஹிந்த அணியினர் தங்கள் சார்பு இனவாதக் குழுக்களை களத்தில் இறக்கிவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான பிரச்சாரத்தை தெற்கில்முடுக்கிவிட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதிதான் வவுனியாவில் நேற்று முன்தினம் பொதுபலசேனா நடத்திய ஆர்ப்பாட்டம், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இந்த விவகாரத்தைப்பயன்படுத்துவதற்கு மஹிந்த அணியினர் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.