முல்லைத்தீவு, நாயாறில் உள்ள நீராவியடி யில் அமைக்கப்படும் விகாரையின் கட்டுமானங்களை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமஎன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அந்தப் பகுதியில் பிக்கு ஒருவர் விகாரை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அந்தப் பகுதியில் சபையின் அனுமதி இன்றியே விகாரையின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவற்றை உடன் நிறுத்த வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலருக்குப் பிரதேச சபைத் தவிசாளர் கடிதம் மூலம் கோரியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் ஆராயுங்கள் என்று கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலருக்கு மாவட்டச் செயலர் பணித்திருந்தார்.
தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் 60 அடி உயரத்தில் விகாரை அமைக்கவும், அதனுடன் இணைந்ததாக விடுதி அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பௌத்த சாசன அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களத்தில் அதற்கான அனுமதி பெற்றுள்ளார். ஆனால் பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை என்று தெரியவந்தது. இந்த விடயத்தை மாவட்டச் செயலர் பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தினார்.
பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது விகாரை அமைக்கப்படுவதற்கு எதிராகப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமைவாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 28ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விகாரைக் கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
அதேவேளை, குருந்தூர்மலையில் புத்தர் சிலை அமைக்கும் நோக்குடன் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் சென்றனர் என்று கூறப்படும் சம்பவம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள பௌத்த மதகுருக்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்பது தொடர்பில் அறிக்கையிட வேண்டும் என்று தொல்லியல் திணைக்களத்துக்குப் பணித்துள்ளது.