நாயகன் பிரதீப் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஒரு பெண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் இவரோ அவர் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணமான நாயகி பாணுவை சந்திக்கிறார்.
பிரதீப்பும், பாணுவும் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் ஒரு நீண்ட தூர பயணத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த பயணம் எங்கு? எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். தன் கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாயகியாக வரும் பாணுவிற்கு நடிக்க அதிக வாய்ப்பு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். குட்டி பையன் யாத்ரா, தாத்தாவாக வருபவர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
அருவி என்கிற யதார்த்த சினிமாவை நமக்கு வழங்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், தற்போது வாழ் படம் மூலம் மனிதனின் யதார்த்த வாழ்க்கையை சொல்ல வந்திருக்கிறார்.
புரியாமல் ஆரம்பிக்கும் திரைக்கதை மெல்ல மெல்ல கதைக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் ஷெல்லேவின் ஒளிப்பதிவு. மனதிற்கு நெருக்கமாகும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியுள்ளார். அதேபோல் பிரதீப் குமாரின் இசை, பார்ப்பவர்களை கதையோடு ஒன்ற வைக்கிறது.
மொத்தத்தில் ‘வாழ்’ வாழலாம்.
http://Facebook page / easy 24 news