யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது.
ஒரு மனிதன், இறைவனை வேண்டினான். “என்னுடைய வாழ்க்கையில் அனைத்துமே துன்பமாகத்தான் இருக்கிறது. இன்பத்தையே என்னால் காண முடியவில்லை. இப்படியொரு வாழ்க்கையை எனக்கு எதற்காகக் கொடுத்தாய்?” என்று கேட்டான்.
அவன் முன்பாகத் தோன்றிய இறைவன், “உனக்கு நான் ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறேன். அதனை இன்பமானதாக மாற்றிக்கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கான முயற்சியைத்தான் நீ எடுக்க வேண்டுமே தவிர, என்னை குறை கூறுவதால் என்ன பயன்” என்று கேட்டார்.
“இறைவா.. தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் புரியும்படியாக விளக்குங்கள்” என்றான், அந்த மனிதன்.
உடனே இறைவன், அங்கே ஒரு அறையை உருவாக்கினார். அந்த அறை முழுவதும் கண்ணாடிகளால் ஆனதாக இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடிகள் நான்கு புறங்களிலும், மேற்பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு ஒரு சிறுமியை அழைத்து வந்த இறைவன், அந்த அறைக்குள் அச்சிறுமியை அனுப்பி வைத்தார். அறைக்குள் சென்ற சிறுமிக்கு மனம் குதூகலித்தது. ஏனெனில் அந்த அறையில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடிகளிலும் தன்னுடைய உருவமே தெரிவதைக் கண்டு அவள் ஆனந்தக் கூத்தாடினாள். அவளை வெளியே அழைத்து வந்த இறைவன், “உள்ளே சென்றாயே.. உனக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுமி, “இந்த அறையைப் போல ஒரு மகிழ்ச்சியான இடத்தை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
இறைவன் இப்போது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனை அழைத்து வந்தார். அவனையும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்தார். அறைக்குள் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன், அந்த அறைக்குள் கண்ணாடியால் பிரதிபலிக்கப்பட்ட தன்னைப் போன்ற ஆயிரம் மனிதனையும் கண்டு மிரண்டு போனான். கத்தி கூப்பாடு போட்டான். தனக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டதாக கருதினான். என்ன செய்வதென்று தெரியாமல், தன்னைச் சுற்றி இருந்த உருவங்களைத் தாக்க கையை ஓங்கினான். கண்ணாடி அதையும் பிரதி பலித்தது. ஆயிரம் உருவங்களும் இணைந்து, அவனைத் தாக்க வந்தன.
கொஞ்ச நேரத்தில் அவனை வெளியே அழைத்த இறைவன், “இந்த அறையைப் பற்றி நீ என்ன நினைக் கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “இந்த இடத்தைப் போல துன்பகரமான இடத்தை நான் இதுவரை பார்த்ததில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து ஓடினான்.
இப்போது இறைவன், தன்னிடம் வேண்டிய மனிதனை நோக்கி, “பார்த்தாயா.. அறை ஒன்றுதான். ஆனால் அங்கு சென்றவர்களின் மனநிலைக்கு ஏற்ப, அது இன்பத்தையும், துன்பத்தையும் வழங்குகிறது. நான் எல்லோரையும் போலத்தான் இந்த பூமியில் உன்னையும் படைத்திருக்கிறேன். அதை இன்பமாக மாற்றிக்கொள்வதும், துன்பகரமானதாக ஆக்கிக்கொள்வதும் உன் செயலால் நடைபெறுபவை.
யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது. உனக்கு கரும்பு தோட்டம் கிடைத்தால், நீ யானையாக வாழலாம். ஆனால் உனக்கு கிடைத்திருப்பது கரும்பின் சக்கைதான். ஆகையால் நீ எறும்பாக மாறினால்தான் இன்பத்தைக் காண முடியும்” என்றார்.
மனம் தெளிவடைந்த மனிதன், தன்னுடைய செயலால் இன்பம் காண, தன் அன்றாட கடமைகளை சரிவரச் செய்ய கிளம்பினான்.