எம்முடைய பழைய வாழ்க்கை முறைமைகளில் ஊதியம் குறைவாக இருந்தாலும் போதிய ஓய்வுடன் நிறைவான வாழ்க்கை கிடைத்தது, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்தது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று மேற்கு பகுதியில் மரக்கறி, மீன், இறைச்சி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு என புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் எமது அமைச்சின் நிதி அனுசரணை, மற்றும் நெல்சிப் திட்ட நிதி, பிரதேச சபை நிதிகள் என பல நிதி மூலங்களில் இருந்து நிர்மாணிக்கப்பட்ட சந்தைக் கட்டடங்கள், அலுவலகக் கட்டடங்கள், நூல் நிலையம், சுற்றுலா கடற்கரை மையம், வற்றாப்பளை ஆலயத்திற்கான நீர் வழங்கும் திட்டம், உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் என பல கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ளோம்.
புதிதாக அமைக்கப்பட்ட இக் கட்டடத் தொகுதியில் மரக்கறி வர்த்தகத்திற்கென 20 கடைகள் அதற்கு மேலதிகமாக பலசரக்கு வர்த்தகத்திற்காக 5 கடைகள் இறைச்சி வகைகளின் விற்பனைக்காக 04 கடைகள் என நெல்சிப் திட்டத்தில் இருந்து பெறப்பட்ட 10.31 மில்லியன் ரூபா செலவில் இக் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கு மேலதிகமாக பிரதேச சபை நிதியில் இருந்து 8.87 மில்லியன் ரூபா செலவில் மீன் சந்தை, ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கான மலசலகூடம், சுற்றுமதில், நீர்த்தாங்கி, நிலத்திற்கு கல்பதித்தல் ஆகிய வேலைகள் நிறைவேற்றப்பட்டு பல சேவைகளையும், வசதிகளையும் உள்ளடக்கியதான ஒரு சந்தைக் கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
இக் கட்டடத் தொகுதியை நேர்த்தியாக இதன் அழகு குன்றாது பராமரிக்க வேண்டியது இங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் கூட்டுப் பொறுப்பாகும்.
வடமாகாணசபை இவ்வாறான பெருந்தொகை நிதிச் செலவீனங்களுடன் இவ்வாறான கட்டடத் தொகுதிகளை அமைத்துக் கொடுக்கின்றதென்றால் அது இங்குள்ள சாதாரண பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவேயன்றி வேறொன்றில்லை.
எம்முடைய பழைய வாழ்க்கை முறைமைகளில் ஊதியம் குறைவாக இருந்தாலும் போதிய ஓய்வுடன் கூடிய நிறைவான வாழ்க்கை எமக்கு கிடைத்தது.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்தது. ஒரு வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தால் அவரை சைக்கிள் வைத்திருக்கும் பணக்காரர் என்றும் தற்செயலாக ஒரு கிராமத்தில் ஒரு கல்வீடு இருந்துவிட்டால் அவரைக் ‘கல்வீட்டு ஐயா’ என்றும் ஏனையவர்கள் விழிக்கத் தலைப்பட்டனர்.
ஏனென்றால் தாமும் சைக்கிள் வாங்க வேண்டும், கல்வீடு கட்ட வேண்டும் என்ற அவா இன்றி மக்கள் அன்று மனத்திருப்தியுடன் வாழ்ந்தார்கள். பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இருந்ததை வைத்துத் திருப்திப் பட்டார்கள்.
உங்களையும் அவ்வாறே மாறும்படி நான் கூறவில்லை. மனமகிழ்ச்சிக்கு வழி கூறுகின்றேன்.
ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாகிவிட்டது. வீட்டிற்கு இரண்டு அல்லது மூன்று மோட்டார் வாகனங்கள், தந்தை, தாய் இருவரும் உழைக்கின்றார்கள்.
பிள்ளைகள் ஆயாவின் கவனிப்பில் விடப்படுகின்றார்கள். இதுதான் பட்டண வாழ்க்கை. அகலக்கால் வைக்கப்போய் இறுதியில் பெற்றுக் கொண்டது கடன் தொல்லை. கடனை அடைக்க மாடாய் உழைக்க வேண்டியிருக்கின்றது.
ஓய்வு ஒழிச்சல் இல்லை, மன நிம்மதி இல்லை, ஏனோதானோ என்ற இறைவழிபாடு, பிள்ளைகளின் முறை தவறிய நடைமுறைகள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு நாம் ஏன் ஓடுகின்றோம் என்று எமக்குத் தெரியாது, மனைவி ஏன் ஓடுகின்றாள் என்று அவருக்குத் தெரியாது பிள்ளை ஏன் படிக்கவில்லை என்று பிள்ளைக்குத் தெரியாது. ஆனாலும் ஓடுகின்றோம் ஏனென்று தெரியாது ஓடுகின்றோம். இந்த நிலைதான் இன்றைய நிலை.
வாழ்க்கையின் வேகம் கூடிவிட்டது. ஆர அமர சிந்திக்க முடியாது தவிக்கின்றோம். இந்த வேசம் கிராமங்களுக்குப் பரவ முன் அது பற்றி அறிந்திருப்பது நல்லதென்பதாலேயே இவற்றைக் கூறுகின்றேன்.
எனவே நாம் எமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறைமை, வருங்கால சந்ததிக்கு சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலை விட்டுச் செல்லுகின்ற விடயங்களில் கூடிய அக்கறை காட்டவேண்டும். புண்பட்ட இந்த சமூகம் இறைபக்தியுடன் கூடிய அமைதியான வாழ்க்கை முறைக்கு திரும்ப நாம் அனைவரும் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.