மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள உயர் சார்பு சிகிச்சைப் பிரிவிற்கான தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கட்டில்களை இலங்கை பொதுஜன பெரமுன பொறியியலாளர் சங்கத்தின் அனுசரனையில் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று வழங்கி வைத்தார்.
அமைச்சர் வாழைச்சேனை அதார வைத்திய சாலைக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த இராஜங்க அமைச்சர் மேற்குறித்த சிகிச்சைப்பிரிவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் புனருத்தாரன நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் வைத்திய சாலையில் நிலவும் ஆளணி பிரச்சினை மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.இங்கு அதி தீவிர சிகிச்சைப்ப பிரிவு ஒன்று இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பாதிப்பிற்குள்ளாவதனால் அதனை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை சட்ட வைத்தியர் ஒருவர் இவ் வைத்தியசாலையில் இல்லாத நிலையில் பெரும்பாலன பிரேதங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடற் கூற்றாய்விற்காக இடமாற்றம் செய்வதனால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கருத்தொன்றை அமைச்சரிடம் முன்வைத்திருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் முகமாக நாட்டில் தற்போது சட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை பற்றாக் குறையாகவுள்ளதாகவும் தாம் இவ்விடயம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ளாகவும் இதற்கான தீர்வு பெற்றுதர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பதில் வழங்கினார்.
தற்போது கொரோனா தொற்று சிகிச்சை நிலையமும் இவ் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகால தேவைப்பாடான இச் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் தங்களுக்கு ஏற்படும் உயர் தேவைப்பாடு உடைய உயர் தர சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.