முதலீட்டாளர்களுக்கு ஆதர்ச நாயகனாக இருக்கும் வாரன் பஃபெட், தனது நிறுவனத்துக்கு புதிய தலைவரை விரைவில் நியமிக்க உள்ளார். தலைவர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த அஜித் ஜெயின். மற்றொருவர் கனடாவைச் சேர்ந்த கிரிகோரி ஆபெல்.
வாரன் பஃபெட், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போகிறார். ஓய்வுக்குப் பின்பு யாரை நியமிப்பது என்பது குறித்து தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக, பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத்தலைவர்களாக அஜித் ஜெயினையும், கிரிகோரி ஆபெலையும் நியமித்திருக்கிறார். `விரைவில், இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நிறுவனத்தின் தலைவர் பதவியைப் வழங்க இருக்கிறார் வாரன் பஃபெட்’ என்கிறார் அவரது நண்பரும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய பங்குதாரருமான சார்லி முங்கர்.
வாரன் பஃபெட்டின் தலைமை பதவிக்குப் போட்டியிடும் அஜித் ஜெயினும், கிரிகோரி ஆபெலும் எதிரெதிர் துருவங்கள். ஆனால், வாரன் பஃபெட் இருவரையும் சமமாகவே நடத்தி வருகிறார். இருவருமே எந்தவிதமான உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் நம்பிக்கையுடன் தங்களுடைய வியாபார முடிவுகளைவும், நிறுவனத்தின் பணியாளர்களையும் தேர்வுசெய்து வருகின்றனர்.
அஜித் ஜெயின், பெர்ஷையர் நிறுவனத்தில் காப்பீட்டு பிரிவின் தலைவராக இருக்கிறார். நிறுவனங்களின் அபாயங்களைக் கணக்கிடுவதில் நிபுணத்துவம் பெற்றவர். கிரிகோரி ஆபெல் பெர்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் எரிசக்தி பிரிவின் தலைவராக இருக்கிறார்.
“என்னை விட பெர்ஷையரின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அஜித். ஹாத்வே நிறுவன மதிப்பைப் பல பில்லியன் டாலருக்கு உயர்த்திருக்கிறார். அஜித் எங்களுடைய நட்சத்திரம். இவர், எங்களுடன் வேலை பார்ப்பதே பெரிய விஷயமாக நினைக்கிறோம். பெர்ஷையர் நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து என்று சொன்னால் மிகையல்ல” என்று பாராட்டியிருக்கிறார் வாரன்.
ஒடிஸாவில் பிறந்து வளர்ந்தவர் அஜித். ஐஐடி-யில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்தவர், ஹாவர்டு பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை படிப்பை முடித்திருக்கிறார். ஆரம்பக்காலத்தில், ஐ.பி.எம், மெக்கான்சி போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். 1986-ம் ஆண்டு தன்னுடைய 30-வயதில் பெர்ஷையர் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். காப்பீட்டுக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்ற இவர், மற்ற நிறுவனங்கள் தொட விரும்பாத ரிஸ்க் அதிகமான பாலிசிகளை எளிதாகக் கையாண்டு, பெர்ஷையர் நிறுவனத்துக்குப் பெரிய அளவில் வருமானத்தைப் பெற்று தந்திருக்கிறார்.
2013-ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்துக்கான இன்ஷூரன்ஸ் வரைவு தயாரிப்புக்காக ஒரு பில்லியன் டாலரைப் பரிசாக பெற்றிருக்கிறார் அஜித். அந்தப் பரிசை அப்படியே பெர்ஷையர் நிறுவனத்துக்கே வழங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதைப்போலவே, 1997-ம் ஆண்டு கலிபோர்னியா மாகாண அரசு, இயற்கை பேரழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் 1.5 பில்லியன் டாலர் மதிப்புக்குக் காப்பீடு செய்ய முன்வந்தது. இந்தக் காப்பீட்டுக்கான ஒப்பந்தத்தில் மற்ற காப்பீடு நிறுவனங்கள் கையெழுத்திட முன்வராதபோது, அஜித் ஜெயின் தைரியமாக அந்தக் காப்பீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். இவருடைய நம்பிக்கையான முடிவுகளால், ஒவ்வொரு ஆண்டும் 590 மில்லியன் டாலரைக் காப்பீட்டு தொகையைப் பெற்று வருகிறது பெர்ஷையர் நிறுவனம்.
கிரிகோரி ஆபெல், வாரன் பப்பெட்டின் காது போன்றவர் என்கின்றனர் பெர்ஷையர் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். “எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வரும். ஆனால், ஆபெலின் அழைப்புக்காக பெரும்பாலான நேரங்களில் காத்திருப்பேன். ஆபெல், பிஸினஸ் குறித்து ஆலோசனைகளையும், புதிய உத்திகளையும் சொல்லும் விதமே அழகு. ஒப்பந்தங்களை கச்சிதமாக முடிக்கக்கூடியவர் ஆபெல்” என்று பாராட்டியிருக்கிறார் வாரன்.
எந்த விஷயமாக இருந்தாலும் அது வாரன் காதுக்கு கொண்டு செல்வதில் வல்லவர் ஆபெல். இவர் எரிசக்தி துறையின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, 2015-ம் ஆண்டில் 40.77 மில்லியன் டாலர் செலவை குறைத்தும், 2016-ம் ஆண்டில் 17.52 மில்லியன் டாலர் தொகையை இழப்பீட்டுத் தொகையாகப் பெற்றும் நிறுவனத்தின் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
“இரண்டு பேருமே என்னை விட அதிகமாகவே பெர்ஷையர் நிறுவனத்தை நேசிக்கின்றனர். அவர்களின் ரத்தத்தில் பெர்ஷையர் நிறுவனம் முழுவதும் கலந்திருக்கிறது. என்னைவிட, பெர்ஷையர் நிறுவனத்தைச் சிறப்பான முறையில் வழிநடத்த இவர்களை விட்டால் வேறுயார் இருக்கிறார்கள்” என்று இருவரையும் சேர்த்து பாராட்டி இருக்கிறார் வாரன்.
வயதில் மூத்தவராக உள்ள அஜித் ஜெயினுக்கு பதவி வழங்கலாமா? அல்லது வயதில் குறைந்த ஆபெலுக்கு தலைவர் பதவி வழங்கலாமா என்று வாரன் பஃபெட் யோசிப்பதாகச் சொல்கின்றனர். விரைவில், 317,775,000,00 கோடி ரூபாய் மதிப்புள்ள பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.