இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும் இதுவரை விவாதங்களில் எதுவும் பங்கேற்கவில்லை. முதல் முறையாக நேற்று தனது கன்னிப்பேச்சை நிகழ்த்த அவர் அனுமதி கேட்டிருந்தார்.
விளையாட்டு உரிமை மற்றும் இந்திய விளையாட்டின் எதிர்காலம் குறித்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அனுமதி கேட்டிருந்த அவருக்கு, அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் அனுமதி வழங்கி இருந்தார். நேற்று மேல்-சபை முதல் முறை ஒத்திவைக்கப்பட்டு, 2 மணிக்கு கூடிய போது தெண்டுல்கரை உரையாற்ற வெங்கையா நாயுடு அழைத்தார்.
அப்போது மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்குமாறு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டதால் தெண்டுல்கரால் உரையாற்ற முடியவில்லை. தனது இடத்தில் எழுந்து நின்று காங்கிரசாரின் அமளியை வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றார்.
தெண்டுல்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்றும், பாரத ரத்னா விருது பெற்றவர் என்றும் கூறிய வெங்கையா நாயுடு, அவரது பேச்சு இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்பதால் அவரை பேச அனுமதிக்குமாறு காங்கிரசாரை கேட்டுக்கொண்டார்.எனினும் காங்கிரசார் அமைதியடையாததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தெண்டுல்கர் மிகவும் ஏமாற்றமடைந்தார்.