வாட்ஸ் ஆப் மூலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்புவதில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பலகோடி மக்கள் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் மூலம் தங்கள் கருத்துக்களை பாதுகாப்புடன் பொதுமக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்டியது. புத்தாண்டு தினத்தன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்கிடையே வாட்ஸ் ஆப் மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: டிசம்பர் 31 2017 நள்ளிரவு 11.59ல் இருந்து புத்தாண்டு பிறக்கும் 12.00 மணி வரை சுமார் 20 மில்லியன் இந்தியர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளனர்.
உலக அளவில் 75 மில்லியன் மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வாட்ஸ்ஆப் மிகப்பெரிய மைல்கல்லை அடைந்துள்ளது.
மேலும் வாட்ஸ் ஆப்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் புதிய வசதிகள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 300 மில்லியன் யூசர்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும். இவ்வாறு வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக புத்தாண்டு நள்ளிரவில் அதிக பயன்பாடு காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சில மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது குறிப்பிடத்தக்கது.