விரைவில் அரசியல் கட்சித் துவங்கவிருக்கும் நடிகர் ரஜினி, முன்னதாக, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை நியமித்து, நடிவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறார். பல்வேறு அணிகளை துவக்கி, அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து இருக்கிறார்.
இந்நிலையில், இந்த மக்கள் மன்றத்தின் மொத்த செயல்பாடுகளையும், எல்லாத் தரப்பு மக்களிடமும், குறிப்பாக ரசிகர் மன்றத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் கொண்டு செல்வதற்காக, பல்வேறு ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்களையும், மாநிலம் முழுவதும் துவங்கி நடத்தி வருகின்றனர்.
இதில், மக்கள் மன்றத்துக்கும்; நிர்வாகிகளுக்கும் எதிராக செயல்பட்டு, அது ரஜினியின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மன்ற விரோத நடவடிக்கைக்காக, மன்றத்தில் இருந்தே நீக்கப்பட்ட பலரும், தொடர்ந்து ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கூடவே, அவர்கள், மன்றம் மற்றும் மன்ற செயல்பாடுகள் குறித்த தவறான தகவல்களையும் ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்களில் செய்திகளாக பதிவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட தகவல்களெல்லாம், தொடர்ந்து ரஜினியின் கவனத்துக்கு, அவரது நண்பர்களால் கொண்டு செல்லப்பட்டது. உடனே, மன்றத்து மாநில பொறுப்பாளர்களை அழைத்த ரஜினி, மன்றத்துக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, ரஜினி மக்கள் மன்றத்துக்கென உள்ள பல்வேறு ‘வாட்ஸ்-ஆப்’ குழுக்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவை வெளியிடப்பட்டு இருக்கின்றன. அந்த விதிமுறைகளை மீறி, எந்த ‘வாட்ஸ்-ஆப்’ குழு இயங்கினாலும், அதன் அட்மின் உட்பட மன்ற நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.