வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் எடுக்கப்படும். அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு கடந்த 4ஆம் திகதி கூடியுள்ள நிலையில் அதன் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வாகன இறக்குமதி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.குழுவின் அறிக்கைக்கு இணங்க நாட்டின் கையிருப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மக்களின் முக்கிய தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வாகன இறக்குமதியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்துள்ளோம்.
பொது போக்குவரத்து சேவைக்கான வாகனங்கள்,பொருட்கள் போக்குவரத்துக்கான வாகனங்கள்,மாற்று வாகனங்கள், சாதாரண வாகனங்கள்,மற்றும் தனியார் வாகனங்கள் என்ற பின்பற்றலுக்கு இணங்க வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அத்துடன் சுற்றுலாத் துறையின் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படுவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்த ஆயிரம் வாகனங்களில் எந்தவொரு வாகனமும் இதுவரை இறக்குமதி செய்யப்படவில்லை.
அந்த வாகனங்களில் 250 பஸ் வண்டிகள் மற்றும் 750 வேன் ரக வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அது சுற்றுலாத்துறை அமைச்சின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றார்.