வாகனங்களை அவதானத்துடன் செலுத்த ரொரன்ரோ நகரபிதா வேண்டுகோள்
ரொரன்ரோவில் வாகன விபத்துக்களால் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வானொலி அறிவிப்பு ஒன்றின் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ள ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி,வாகன சாரதிகள் வீதிகளில் அதிக கவனத்துடனும், வீதிச் சமிக்கைகளை பின்பற்றியும் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு அவதானமாக வாகனங்களைச் செலுத்துவதன் மூலம், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்து விடலாம் என்பதுடன், பிறரது உயிரையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த வீதி விபத்துக்களால் பாதசாரிகள் பலர் பலியாகியுள்ளதையும் ரொரன்ரோ நகரபிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டின் தற்போது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் குறைந்தது 36 பேர் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 17 பேர் பாதசாரிகள் என்பதை ரொரன்ரோ நகர புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.