வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் ‘டெங்கு சிவப்பு வலய’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. வவுனியாவின் கற்குழி மற்றும் நெளுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த 16 நாட்களில் 70 பேர் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனால் வவுனியாவின் கற்குழி, நெளுக்குளம் மற்றும் செட்டிக்குளத்தின் சில பகுதிகள் ‘டெங்கு சிவப்பு வலயமாக’ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் டெங்கு சிவப்பு வலயத்தில் 16 நாட்களில் எழுபது பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிற்கு சென்று வருபவர்களாகவே இருக்கின்றனர். இதே போல் இரண்டு வாரத்திற்கு முன்னரும் டெங்கு நோயின் தாக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனவே வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களிற்கு செல்லும்போது டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகள் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிடும்போது அதற்கான உரிய அவதானத்தை எடுக்கவேண்டும்.
மேலும் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். டெங்கு நோய்க்குரிய அறிகுறி தெரியும் பட்சத்தில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.