வவுனியா மரக்காரம்பளையில் சுமார் 4கோடி ரூபாய் செலவில் அமைக்கபட்ட நவீன பால்பண்ணை தொழிற்சாலை கவனிப்பாரற்ற நிலையில் பற்றை மூடி இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குளவிகளும், குரங்குகளும் குடிகொள்ளும் குகையாக மாறிவருவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் இதுவரை ஏன் இதனை இயங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஆதங்கபடுகின்றனர்.
நீண்டகாலம் பயன்படாமல் இருக்கின்றமையால், இத் தொழிற்சாலையில் உள்ள பெறுமதிமிக்க இயந்திர பாகங்கள் பழுதடையும் நிலையில் உள்ளது. குறித்த தொழிற்சாலை ஒரு நாளைக்கு 1500 லீற்றர் பால் பதனிடும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.
இதனால் வவுனியா கால்நடை வளர்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடையகூடிய நிலை இருக்கிறது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு , மக்களின் நலனுக்காக நல்லதோர் தீர்வினைப் பெற்று அழிந்து போகின்ற வளத்தினை மீளகட்டி எழுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
குறித்த பால்பண்ணை சர்வதேச நிறுவனங்களான ஒக்பாம், யூஎஸ் எய்ட், யு.என்.டி.பி ஆகியவற்றின் நிதியில் அண்ணளவாக, 4 கோடிக்கும் அதிகளவான நிதியில் நவீனமுறையில் அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட கால்நடை வளர்பாளர் கூட்டுறவு சங்களின் சமாசத்தலைவர் எஸ்.கந்தசாமியிடம் கேட்டபோது, குறித்த பாற்பண்ணயை இயங்கவைப்பதில் நிதியே பாரிய பிரச்சினையாக இருந்துவருகின்றது. குறிப்பாக உற்பத்தி அலுவலர் ஒருவரை பணிக்கு அமர்த்த வேண்டும் அதனை விட 5 ஊழியர்களும் நியமிக்கபட வேண்டும்.
அவர்களிற்கு சம்பளம் வழங்க வேண்டிய தேவையிருக்கிறது. இயந்திரங்களில் காணப்படும் சிறிய பழுதுகள் திருத்தபட வேண்டியிருக்கிறது. குறித்த பாற்பண்ணை இயங்கினால் வவுனியா மாவட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவே அமையும் அதனை நாம் நன்கு அறிவோம். அதனை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சில மாதங்கள் அதனை இயக்குவதற்கான நிதி வசதிகள் கிடைத்தாலே போதும் பின்னர் சுழற்சிமுறையில் அதனை தொடர்ந்து நடாத்தமுடியும். அதன் பெறுமதி எமக்கு விளங்கும். எனவே விமர்சனங்களை முன்வைப்பவர்கள் உண்மை நிலையினை உணர்ந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் இந்திரா சுபசிங்கவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பால்பண்ணையை இயக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். நீண்ட காலம் பாவனையற்று இருந்தமையால் அதன் இயந்திரங்களில் சிறு பழுதுகள் ஏற்பட்டிருக்கலாம் அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து சீரமைக்க வேண்டும். கடந்தவருடம் அரசாங்கத்தினால் 50 தொழிற்சாலைகள் உருவாக்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கபட இருந்தது. அந்த திட்டத்தின் கீழ் குறித்த பால்பண்ணையை நாம் உள்ளடக்கியிருந்தோம் அதற்கான நிதி வசதிகள் எமக்கு கிடைக்கவிருந்த நிலையில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமையால் அந்த நிதி எமக்கு கிடைக்கவில்லை.எனவே இவ்வாண்டில் குறித்த பாற்பண்ணையை இயங்க செய்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.