ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குச் சென்ற பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த ஒருவரே கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் பூகொடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணாவார்.
குறித்த பெண் தனது வீட்டிலிருந்த ஐந்து பவுண் பெறுமதியான தங்க நகைகளைக் காணவில்லை என தனது சகோதரனை சந்தேகிப்பதாக பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார் .
இதனையடுத்து, நீதிமன்ற விசாரணைகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏற முற்பட்டபோதே குறித்த அவரது கழுத்து அறுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர் ஆபத்தான நிலைமையில் இல்லை என ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.