வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இலங்கையின் கடற்பிராந்தியங்களில் 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும். இதனால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர அதிகாரி அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்தளவான தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ச்சியாக கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது. அத்துடன் இரவு வேளைகளில் அதிகளவாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய நிலையிருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனடிப்படையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி ஏற்படும். இது எதிர்வரும் மணித்தியாலங்களில் மேலும் அதிகரிக்கும் நிலையிருக்கின்றது. அச்சந்தர்ப்பங்களில் இடியுடன் கூடிய கடுமையாக மழைவீழ்ச்சி கிடைக்கும். அதன்போது குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
நேற்று (நேற்றுமுன்தினம்) பெய்த கடும் மழைகாரணமாக கிரிந்தவெல பிரதேசத்தில் 194 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் இரத்தினபுரி, காலி மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கு 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இது எதிர்வரும் மணித்தியாலங்களில் அதிகமாகும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. கொழும்பு முதல் புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களில் மணிக்கு சுமார் 60 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் கடும் காற்றுவீசக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடலுக்கு செல் லும் மீனவர்கள் உட்பட பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும். மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் மின் சாதனங் களை மக்கள் பயன்படுத்தும் போதும் மேகமூட் டத்துடனான வானிலை காணப்படும் போதும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.