நடப்பு உலக சம்பியன் நியூஸிலாந்து உட்பட 16 நாடுகள் நான்கு குழுக்களில் பங்குபற்றும் 16ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமாகவுள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெற்ற வலைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியில் 13ஆம் இடத்திலிருந்து 16ஆம் இடம்வரையான நிரல்படுத்தல் சுற்றில் சிங்கப்பூரை இரண்டு தடவைகள் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
கடைநிலை அணிகளுக்கு இடையிலான சுற்றில் சிங்கப்பூரை 88 – 50 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை, நிரல்படுத்தல் போட்டியிலும் 78 – 57 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 15ஆம் இடத்தைப் பெற்றது.
அதன் பின்னர் மூன்று வருடங்கள் கழித்து கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் சுற்றில் 67 – 49 என்ற கோல்கள் கணக்கிலும் இறுதிப் போட்டியில் 63 – 53 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்ற இலங்கை, தோல்வி அடையாத அணியாக ஆசிய சம்பியனாகி இந்த வருட உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரைவிட இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஹொங் கொங் ஆகிய நாடுகளையும் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
தர்ஜினிக்கு பிரியாவிடை உலகக் கிண்ணம்
இலங்கை அணியில் பிரதான கோல் போடும் (கோல் ஷூட்டர்) வீராங்கனையாகத் திகழ்பவர் தர்ஜினி சிவலிங்கம் ஆவார். 44 வயதான போதிலும் விளையாட்டுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் தொழில்முறை வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டுவரும் தர்ஜினி 6 அடி 9 அங்குலம் உயரம் உடையர்.
அவரது உயரம்தான் அவருக்கு இலகுவாக கோல்களைப் போடுவதற்கு உதவியாக இருக்கிறது. தர்ஜினி தனது உயரத்தைக் கொண்டு ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த 2 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளிலும் அதிக கோல்களைப் போட்ட உலக சாதனையாளர் தர்ஜினி ஆவார். 2019 உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தில் 7 பொடடிகளில் 348 கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார்.
இது இவ்வாறிருக்க, கயஞ்சலி அமரவன்ச தலைமையில் முன்னாள் தலைவிகளான செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய ஆகியோரும் இலங்கை அணியில் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது. தர்ஜினி சிவலிங்கமும் முன்னாள் தலைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடினமான குழுவில் இலங்கை
2023 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஜெமெய்க்கா, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா, வேல்ஸ் ஆகிய நாடுகளுடன் மிகவும் கடினமான சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
உலக வலைபந்தாட்ட தரவரிசையில் ஜெமெய்க்கா 4ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 5ஆம் இடத்திலும் வேல்ஸ் 9ஆம் இடத்திலும் இலங்கை 15ஆம் இடத்திலும் இருக்கின்றன.
ஜெமெய்க்கா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்துவது இலங்கைக்கு கடினமாக இருக்கும் அதேவேளை, வெல்ஸுடனான போட்டியில் சிறந்த வியூகங்களுடனும் புத்திசாதுரியத்துடனும் விளையாடினால் இலங்கைக்கு வெற்றிபெறக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை மற்றைய குழக்களில் இடம்பெறும் அணிகள் வருமாறு:
ஏ குழு: அவுஸ்திரேலியா, டொங்கா, ஸிம்பாப்வே, பிஜி.
பி குழு: இங்கிலாந்து, மலாவி, பார்படொஸ், ஸ்கொட்லாந்து.
டி குழு: நியூஸிலாந்து, உகண்டா, ட்ரினிடாட் அண்ட் டுபாகோ, சிங்கப்பூர்.
இலங்கை அணியின் போட்டிகள்
எதிர் ஜெமெய்க்கா ஜுலை 27 வெள்ளிக்கிழமை
எதிர் தென் ஆபிரிக்கா ஜூலை 28 சனிக்கிழமை
எதிர் வேல்ஸ் ஜூலை 29 ஞாயிற்றுக்கிழமை
இலங்கை வலைபந்தாட்ட வரலாறு
இலங்கை வலைபந்தாட்ட அணி முதன் முதலாக ஈஸ்ட்போர்னில் நடைபெற்ற 1963 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி 9ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. அப்போது இலங்கையின் ஆங்கிலப் பெயர் சிலோன் ஆகும்.
அப் போட்டியில் வெல்ஸையும் வட அயர்லாந்தையும் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
அதன் பின்னர் 4 உலகக் கிண்ண அத்தியாயங்களைத் தவறவிட்ட இலங்கை, 1983இல் மீண்டும் பங்குபற்றி 14ஆம் இடத்தைப் பெற்றது. 1999இல் 21ஆம் இடத்திற்கு இலங்கை பின்தளப்பட்டது.
1983க்குப் பின்னர் 2007இல் மாத்திரம் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றாமல் இருந்த இலங்கை, கடந்த 3 உலகக் கிண்ண வலைபந்தாட்ட அத்தியாயங்களில் தொடர்ச்சியாக 15ஆம் இடத்தைப் பெற்றுவந்துள்ளது.
இந்த வருடம் அதனைவிட சிறந்த நிலையை அடையும் குறிக்கோளுடன் முன்னாள் தலைவி திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இலங்கை குழாம்
கயஞ்சலி அமரவன்ச (தலைவி), துலங்கி வன்னிதிலக்க (உதவித் தலைவி), செமினி அல்விஸ், கயனி திசாநாயக்க, சத்தரங்கி ஜயசூரிய, திசலா அல்கம, மல்மி ஹெட்டிஆராச்சி, பாஷினி யோஷிதா டி சில்வா, ஷானிக்கா பெரேரா.
பயிற்றுநர்: திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர்: பி. டி. ப்ரசாதி.
(பட உதவி: திபப்பரே.கொம்)