கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்கள் குவித்தது. இலங்கை அணியை திணறடித்த அஷ்வின், ‘ஆல்=ரவுண்டராக’ ஜொலித்தார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என, முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்திருந்தது.
அஷ்வின் அபாரம்:
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் கூடுதலாக 5 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில், புஜாரா (133) அவுட்டானார். சிறிது நேரத்தில் ரகானே (132), புஷ்பகுமாரா பந்தில் ‘ஸ்டம்டு’ ஆனார். மறுபுறம், ஹெராத் பந்தில் சிக்சர் அடித்து அரைசதம் எட்டிய அஷ்வின் (54), அடுத்த பந்தில் போல்டானார்.
சகா அரைசதம்:
பாண்ட்யா, 20 ரன்கள் எடுத்தார். சகா, டெஸ்ட் அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த ஜடேஜா, புஷ்பகுமாரா, தில்ருவன் வீசிய பந்துகளை சிக்சருக்கு அனுப்பி வைத்தார். சகா 67 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். ஜடேஜா 8வது அரைசதம் எட்டினார். ஷமி, 19 ரன் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 622 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா (70), உமேஷ் யாதவ் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ஹெராத் 4, புஷ்பகுமாரா 2 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்:
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ரன் கணக்கை துவக்கும் முன்பே, தரங்கா (0) அஷ்வினிடம் சரண் அடைந்தார். கருணாரத்னேவும் (25), இவரிடம் சிக்கினார். இரண்டாவது நாள் முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து, 572 ரன்கள் பின்தங்கியிருந்தது. சண்டிமால் (8), மெண்டிஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். பேட்டிங் போல பந்துவீச்சிலும் அசத்திய அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு இன்றும் தொடரும் பட்சத்தில், வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறலாம்.
2000, 200
கொழும்பு டெஸ்டில் அரைசதம் அடித்த அஷ்வின் டெஸ்ட் அரங்கில் 2000 ரன்களை கடந்தார். இதுவரை 51 டெஸ்டில் 279 விக்கெட், 2004 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து, டெஸ்ட் அரங்கில் 2000 ரன்கள் எடுத்து, 200க்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய நான்காவது சிறந்த இந்திய ‘ஆல்– ரவுண்டர்’ என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், இந்தியாவின் கபில் தேவ் (131 டெஸ்ட், 5,248 ரன், 434 விக்.,), கும்ளே (132ல் 2,506 ரன், 619 விக்.,), ஹர்பஜன் சிங் (103ல் 2,224 ரன், 417 விக்.,) இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
* தவிர, இயான் போத்தம் (இங்கிலாந்து, 42 டெஸ்ட்), கபில் தேவ் (இந்தியா, 50), இம்ரான் கானுக்குப் (பாக்., 50) பின், குறைந்த டெஸ்டில் இந்த இலக்கை எட்டிய வீரர் ஆனார் அஷ்வின் (51 போட்டி).
1
காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 600 ரன்கள் எடுத்த இந்தியா, கொழும்பு டெஸ்டில் தற்போது 622/9 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இலங்கை மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 600 ரன்னுக்கும் மேல் எடுத்த முதல் அணி என்ற பெருமை பெற்றது இந்தியா.
2
கடந்த 2007, ஓவல் டெஸ்ட் போட்டிக்குப் பின், அன்னிய மண்ணில் இந்திய அணியின் 6 பேட்ஸ்மேன்கள், 50க்கும் மேலாக ரன்கள் குவித்தனர்.
* இதேபோல, 2007க்குப் பின், ஒரு ஆண்டில், தொடர்ந்து நான்கு டெஸ்டில் (687/6, 603/9, 600, 622/9) இந்திய அணி 600க்கும் மேல் ரன்கள் எடுப்பது இரண்டாவது முறையாக நடந்தது.
3
கடந்த 2004, காலே (ஆஸி.,), 2009, கான்பூர் (இந்தியா) டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணியின் மூன்று சுழல் வீரர்கள் 100க்கும் மேல் ரன்களை விட்டுத்தர, இந்த இரு டெஸ்டிலும் இலங்கை தோற்றது.
தற்போது மூன்றாவது முறையாக, இந்த அணியின் ஹெராத் (154 ரன்), தில்ரூவன் (147), புஷ்பகுமாரா (156) என, மூன்று சுழல் வீரர்களும் 100க்கும் மேல் ரன்கள் விட்டுத்தந்தனர்.
4
இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ஹெராத். கடைசியாக பவுலிங் செய்த 5 இன்னிங்சில், 4 முறை 100 க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுத் தந்தார். இதற்கு முந்தைய 41 இன்னிங்சில், ஒரு முறை தான் இப்படி மோசமாக செயல்பட்டார்.
5
இலங்கை மண்ணில், எதிரணியின் 5க்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்கள் (ராகுல்–57, புஜாரா–133, ரகானே–132, அஷ்வின்–54, சகா–67, ஜடேஜா–70) ஒரே இன்னிங்சில் 50க்கும் மேல் ரன் எடுப்பது ஐந்தாவது முறையாக நடந்தது. இதில் இந்தியா மட்டும் மூன்று முறை (1999, 2010, 2017) இந்த இலக்கை எட்டியது.
பிரதீப் ‘அவுட்’
காலே டெஸ்டில் கைவிரல் காயத்தால் குணரத்னே முதல் நாளில் வெளியேற, இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இது கொழும்பு டெஸ்டிலும் தொடர்கிறது. ஏற்கனவே பவுலிங்கில் பலவீனமாக உள்ள இலங்கை அணிக்கு, காலே போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் தந்தவர் பிரதீப். இவர் 18.4 ஓவர் வீசிய நிலையில், தொடையின் பின் பகுதி காயத்தால் வெளியேறினார்.
நேற்று முழுவதும் பந்து வீச வராத பிரதீப்புக்கு, மாலை இவருக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கப்பட்டது. காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால், மீண்டு வர இரண்டு மாதம் தேவைப்படும் என தெரியவந்தது. இதனால், இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினார்.
தப்பினார் அம்பயர்
நேற்று புஷ்பகுமாரா பந்தை எதிர்கொண்ட பாண்ட்யா, அப்படியே நேராக விளாசினார், இதை சற்றும் எதிர்பார்க்காத அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) சடாரென, வலது புறம் நகர்ந்தார். இருப்பினும், இவரை நோக்கி பாய்ந்த பந்து, டக்கர் இடுப்பில் வைத்திருந்த கைக்குட்டையை (‘கர்சீப்’) உரசிக் கொண்டு, பவுண்டரியாக சென்றது. 0.9 வினாடிக்குள் சுதாரித்து, விலகிய டக்கர், நல்லவேளை காயமின்றி தப்பினார்.