வலி. வடக்கில் மீள் குடியேறிய பிரதேசங்களில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்த 5 பாடசாலைகளும் இன்றுவரையில் அதிபர்களுடன் மட்டுமே இயங்குவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
வலி. வடக்கில் புதிதாக குடியமர்ந்த பிரதேசங்களான தையிட்டி , ஒட்டகப்புலம் , ஊறணி போன்ற பகுதிகளில் ஆரம்ப பிரவுகளையுடைய தரம் 1 முதல் தரம் 5 வரையான ஐந்து பாடசாலைகள் 2018ம் ஆண்டு ஆரம்பம் முதல் இயங்க அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் இயங்குகின்றன.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பாடசாலைகளில் இன்றுவரையில் 15ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இணைந்துள்ளபோதிலும் பாடவிதானச் செயற்பாடுகள் மந்த நிலமையிலேயே கானப்படுகின்றது. மார்ச் மாத இறுதியில் முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் குறித்த பாடசாலைகளிற்கு இன்றுவரை ஓர் ஆசிரியர் கிடையாது.
அதிபர் மட்டுமே உள்ளதனால் பாடசாலையின் நிர்வாகச் செயல்பாடுகள் , கூட்டங்கள் இடம்பெறும்வேளைகளில் அல்லது அதிபரிற்கு திடீர் சுகயீனம் ஏற்படும் சந்தர்ப்பத்திலும் எவ்வித மாற்று ஏற்பாடுகளும் கிடையாது. இதன் காரணமாக எஞ்சிய மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்தாலும் கற்றல் செயல்பாடு இடம்பெறும் பாடசாலைகளை நாடிச் செல்வோம் என்ற மனநிலையில் பயணம் செய்கின்றனர்.
போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளோ பொருளாதார வாய்ப்போ அற்ற எமது மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிலையில் ஆசிரியர்கள் மட்டும் இன்னமும் நியமிக்கப்படவில்லை. என்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர. இ.இரவீந்திரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது
இந்த ஆண்டிற்கான இடமாற்றம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த இடமாற்றத்தின்போது குறித்த 5 பாடசாலைகளும் கவனத்தில்கொள்ளப்பட்டு ஆசிரியர் நியமிப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். என்றார்.