பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தமக்கு பெருமளவுக்கு எதிர்பார்ப்புக்கள் எவையும் இல்லையெனத் தெரிவித்திருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியொதுக்கீடு உள்ளிட்ட கடந்தகாலக் குறைபாடுகள் இம்முறையும் மாற்றமின்றிக் காணப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் அதேவேளை விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டு அமைவாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் பூர்த்திசெய்யவேண்டிய தேவையிருப்பதால் இம்முறை வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுஇ செலவுத்திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், திங்கட்கிழமையன்று ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்னரே அதுபற்றிய ஒட்டுமொத்த நிலைப்பாட்டைக் கூறமுடியும் எனத் தெரிவித்தார்.
இருப்பினும் கடந்தகால வரவு – செலவுத்திட்டங்கள் தொடர்பில் தாம் சுட்டிக்காட்டிவந்த குறைபாடுகள் இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்திலும் காணப்படுவதாகக் கூறிய அவர் வழமைபோன்று இம்முறையும் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கான நிதியொதுக்கீட்டை விட பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி கடந்த தடவையை விட இம்முறை ஜனாதிபதி செயலகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர்இ இவைகுறித்து அதிருப்தியடைவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை இதுபற்றி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அமையுமென தாம் பெருமளவுக்கு எதிர்பார்க்கவில்லையெனக் குறிப்பிட்டார்.
அதேபோன்று வரவு செலவுத்திட்டம் என்பது பொருளாதாரத்தை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. மாறாக அது ஒட்டுமொத்த நாட்டினதும் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டதென சுட்டிக்காட்டின அவர் நாட்டில் மேலும் பல பிரச்சினைகள் நிலவுகின்ற வேளையில் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்குவதில் அர்த்தமில்லை என விசனம் வெளியிட்டார்.
மேலும் இதுபற்றிக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாறு தெரிவித்தார்
‘தமிழர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கடந்த காலங்களில் அரசாங்கம் நடந்துகொண்ட விதத்தை அடிப்படையாகக்கொண்டு கொள்கை ரீதியான தீர்மானத்தை மேற்கொள்வதெனில் நாம் இந்த வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். இருப்பினும் தேசிய ரீதியில் நோக்குகையில் முதலில் வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே அதுகுறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்’ என்றார்.