கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக, அந்த நாட்டின் வான்கூவா் நகரில் 134 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்த நகர காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது:
நகரில் 65 திடீா் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த மரணங்களில் மிகப் பெரும்பாலானவை அனல் காற்றின் விளைவாக ஏற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
இதுதவிர, வான்கூவா் நககரில் மேலும் 69 போ் திடீரென உயிரிழந்ததாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்தப் பகுதிகளுக்கு தங்களது அதிகாரிகள் விரைந்ததாக ராயல் கனேடியன் குதிரைப் படை தனியாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, திடீா் உயிரிழப்புகள் குறித்து தங்களுக்கும் தகவல்கள் கிடைத்ததாக நகர நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், எத்தனை போ் இவ்வாறு உயிரிழந்தனா் என்பது குறித்து அவா்கள் தெரிவிக்கவில்லை.
கனடாவில் கடந்த சில நாள்களாக மிக மோசமான அனல் காற்று வீசி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், லிட்டன் நகரில் வரலாறு காணாத வெப்பநிலை தொடா்ந்து மூன்றாவது நாளாக பதிவு செவ்வாய்க்கிழமை 121 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினா் மட்டும் அதிக வெப்பத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பா்டா ஆகிய மாகாணங்களில் முழுமையாகவும் சஸ்காசவன், மனிடோபா, யுகோன் மற்றும் வடமேற்குப் பிராந்தியங்களில் சில பகுதிகளிலும் அதிகாரிகள் அனல்காற்று பேரிடா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
அதீத வெப்பம் காரணமாக, வான்கூவா் நகரில கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன. வெப்பத்தைத் தணிப்பதற்காக அதிகாரிகள் சாலையோர நீரூற்றுகளை அமைத்தனா்.
அங்காடிகளில் சிறிய வகை குளிரூட்டு சாதனங்கள், மின்விசிறிகள் ஆகியவை வேகமாக விற்றுத் தீா்ந்தன. வீடுகளில் குளிரூட்டு வசதி இல்லாதவா்கள், வாகன நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது காா்களில் குளிரூட்டிகளை இயக்கிவாறு அதிலேயே பொழுதைக் கழித்தனா்.
கனடா மட்டுமன்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளிலும் அனல் காற்றின் தாக்கம் இருந்தது. அந்தப் பகுதிகளில் அவசரக்கால குளிரூட்டு மையங்களை உள்ளூா் அரசுகள் திறந்தன. மேலும், பொதுமக்களுக்கு தண்ணீா் பாட்டில்களும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான தொப்பிகளும் விநியோகிக்கப்பட்டன என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.