தாய்லாந்தின் காவோ டின் என்ற கிராமத்தில் வசிக்கிறார் 24 வயது அருனீ ஜேயங்க்ரசங். இவரும் 26 வயது பூன்யாங் சவாட்டீயும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 22 அன்று இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை குடும்பத்தினரும் மணமகள் குடும்பத்தினரும் சந்தித்து, சில சடங்குகளைச் செய்தனர்.
பிறகு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற மணமகன் குடும்பத்தினர், வரவே இல்லை. மணமகள் குழப்பமடைந்தார். மாப்பிள்ளை கிராமத்துக்குத் தேடிச் சென்றனர். அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை மொபைலில் அழைத்தபோது, அவர் நீண்ட நேரம் எடுக்கவில்லை.
பிறகு திருமணத்தை காலை 9 மணிக்கு வைப்பதற்குப் பதில், மாலை 6 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார். உறவினர்கள் காத்திருந்தனர்.
ஆனால் மாலையும் வரவில்லை. அதற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. பிறகு சிலரை விசாரித்தபோதுதான், மாப்பிள்ளையின் குடும்பத்துக்கு மணமகள் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்று தெரியவந்தது.
திருமணத்துக்கு நகைகளும் பணமுமாகச் சுமார் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு மணமகள் வீட்டார் கேட்டிருந்தனர். அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாததால், ஊரை விட்டுச் சென்றுவிட்டனர்.
இறுதிவரை நம்பிக்கை அளித்து ஏமாற்றிவிட்டுச் சென்றதுக்கும் திருமண ஏற்பாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மணமகன் வீட்டார் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.