முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க திரைமறைவில் சதி இடம்பெறுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரங்களையும் உடமைகளையும் அழிக்கவேண்டும் என்பதையும் நமது சமுதாயத்தையும் பெரும்பான்மை சமுதாயத்தையும் முட்டி மோத வைப்பதையும் இலக்காக கொண்டு கபடத்தனமாக காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாம் மிகப்பொறுமையுடனும் உச்சக்கட்ட நிதானத்துடனும் நடந்துகொள்வதே எமது சமூகத்தை பாதுகாக்கும்.
நமது மார்க்கத்தை பற்றி தவறாகவும் ஆபத்தானதாகவும் இன்று மற்றைய சமூகங்கள் பார்க்குமளவிற்கு நாளுக்கு நாள் இடம்பெறும் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழு சமூகத்தையும் பாதிப்படைய செய்வதோடு,ஒட்டு மொத்தமான இழுக்கையும் ஏற்படுத்துகின்றது.
இன்று சிலர் முஸ்லிம்களை வேண்டுமென்றே வன்முறைக்கு இழுக்கும் வியூகங்களில் இறங்கியுள்ளனர்.அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற நோக்கிலும் சில அரசியல்வாதிகள் முஸ்லிம்களை பற்றி இல்லாத பொல்லாத கதைகளை கட்டி வருகின்றனர்.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் காட்ட வேண்டிய தேவை சில அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எழுந்துள்ளது.
இவ்வாறான இனவாதிகளின் தேவைகளுக்கு தீனி போடும் வகையில் பெரும்பான்மை ஊடகங்களும் செயற்படுகின்றன.
மாவனல்லையில் ஒரு சில இளைஞர்கள் சிலைகளை உடைத்தமைக்காகவும் புத்தளம் வனாத்தவில்லுவில் ஒரு சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமைக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் மீது இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ்’ பயங்கரவாதிகளுடன் இணைத்து பேசுகின்றனர். இதன் பின்புலம்தான் என்ன?தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதனையே நாமும் வலியுறுத்துகின்றோம். குற்றம் செய்தவர்களுக்கு அதற்கான தண்டனையை கொடுங்கள். சமூகத்தின் மீது வீண் பழியை சுமத்தாதீர்கள்.கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் தாமரைத் தடாகத்தில் நேற்று (27) இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.