வன்கூவரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது
அண்மையில் வன்கூவரில் உள்ள பனிச்சறுக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இங்கிலாந்து மலையேறியின் எச்சம் என்று கனடா அதிகாரிகள் (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, குறித்த எச்சம், இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் நகரில் வசிக்கும் 22 வயதுடைய டொம் பில்லின்டினுடையது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவுக்கு எட்டு வார சுற்றுலா மேற்கொண்டிருந்தார். அதன்போது, அவர் கனடாவின் சைப்ரஸ் மலையில் உள்ள ஒரு கடினமான பாதையில் வைத்து இறுதியாக காணப்பட்டார். அதன் பின்னர் அவர் காணாமல் போனார்.
இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் திகதி வன்கூவர் பகுதியில் உள்ள பனிச்சறுக்கில் குறித்த மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வன்கூவர் பொலிஸார் காணாமல் போயிருந்த டொம்மின் பெற்றோருக்கு அழைப்பை ஏற்பட்டுத்தி, சுமார் 2 மணித்தியாலயங்கள் விசாரணை மேற்கொண்டதன் பின்னர், குறித்த எச்சம் அவருடையது என்று உறுதிப்படுத்தினர்.