இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த்த சமீர ஆகிய இருவரும் 2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் ஒப் பெங்களூரு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று முதல் நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் ஒப் பெங்களுரு அணி சம்பியன் பட்டத்தை வென்றதில்லை.
விராட் கோஹ்லி, ஏ.பி.டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், கிளென் மெக்ஸ்வெல் உள்ளிட்ட அதிசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பெங்களூரு அணிக்காக கடந்த காலங்களில் விளையாடி உள்ளதுடன், சிலர் விளையாடிக்கொண்டும் உள்ளனர். எனினும், அந்த அணி கிண்ணம் வெவ்லாமை அவ்வணி ரசிகர்களுக்கு பெரும் சோகமாகவே உள்ளது.
இவ்வாறான நிலையில், சர்வதேச இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க மற்றும் அண்மைக்காலமாக வேகப்பந்துவீச்சில் துல்லியமாக பந்துவீசிவரும் துஷ்மன்த்த சமீர ஆகிய இரு இலங்கையர்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான விடயமாகும்.
கடந்த மே மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடையில் பிற்போடப்பட்ட இப்போட்டித் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த்த சமீர ஆகியோருடன் இந்த அணியில் ஏ.பி.டி வில்லியர்ஸ், கிளென் மெக்ஸ்செல், டேனியல் கிறிஸ்டியன், டிம் டேவிட், கைல் ஜேமிசன் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.