ஒவ்வொரு ஆணின் வெற்றியின் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது முதுமொழி. அதற்கு இணங்க, விற்றலி நிக்லஸின் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் அவரது சொந்த சகோதரி கிறிஸ்டினாவே அன்றி வேறு யாருமல்லர்.
கிளிநொச்சி மாவட்டத்திலும் வட மாகாணத்திலும் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் புகழ்பெற்றவர் கிறிஸ்டினா. அவர் குத்துச்சண்டையிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார். சகோதரி கிறிஸ்டினா குத்துச்சண்டையில் ஈடுபட்டபோதெல்லாம் அவருக்கு பாதுகாப்பாகசென்ற நிக்லாஸுக்கும் குத்துச்சண்டையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
சகோதரிக்கு பயிற்சி அளித்தவர்கள் நிக்லஸின் உடல்வாகை பார்த்ததும் அவர் குத்துச்சண்டைக்கு பொருத்தமானவர் என அடையாளம் கண்டதுடன் அவரை குத்துச் சண்டையில் ஈடுபடுமாறும் ஊக்குவித்தனர்.
இதனிடையே சிறு பராயத்தில் ஆங்கில திரைப்படங்களில் இடம்பெறும் குத்துச்சண்டைப் போட்டிகளைப் பார்த்து தானாகவே குத்துச்சண்டை நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக நிக்லஸ் கூறினார்..
இந் நிலையில், சகோதரியின் வேண்டுகோளுக்கு இணங்க கிளிநொச்சியில் 2013இல் நடைபெற்ற குத்துச்சண்டை தேர்வில் நிக்லஸ் பங்குகொண்டார்.
அங்குதான் அவரது குத்துச்சண்டை வாழ்க்கை ஆரம்பமானது. அதன் பின்னர் குத்துச் சண்டையில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்டுத்தி பல்வேறு வெற்றிகளை ஈட்டிய நிக்லஸ், தேசிய அணிக்கு வட மாகாணத்திலிருந்து தெரிவான முதலாவது குத்துச்சண்டை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள நிக்கலஸ், தனது கன்னி முயற்சியில் பொதுநலவாய தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க கங்கணம் பூண்டுள்ளார்.
அத்துடன் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தெரிவானால் அங்கும் இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்க முயற்சிப்பதாக கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியலாயத்தில் கல்வி பயின்ற நிக்லஸ் தெரிவித்தார்.
‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து என்னை தேர்ந்தெடுத்தவர் இலங்கை குத்துச்சண்டை சங்கத் தலைவரும் பயிற்றுநருமான டயான் கோமஸ் ஆவார். நான் பாடசாலையில் கல்வி கற்றபோது எனது சகோதரியின் உந்துதலால்தான் நான் குத்துச்சண்டையில் ஈடுபடத் தொடங்கினேன். எனது சகோதரி பயிற்சிகளுக்கு செல்லும்போது நான் அவருக்கு துணையாக செல்வேன்’ என நிக்லஸ் தெரிவித்தார்.
ஒரு முறை பயிற்றுநர் ஒருவர் என்னைப் பார்த்து ‘நீங்களும் குத்துச்சண்டையில் ஈடுபடலாம் தம்பி’ என தூய தமிழில் சொன்னபோது நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
‘அதன் பின்னர் 2014இல் நான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். 6 மாதங்களே பயிற்சிபெற்ற நிலையில் கனிஷ்ட தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் 69 கிலோ கிராம் எடைப் பிரிவில் எனது முதல் முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தேன். அதுதான் தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்துக்கு கிடைத்த முதலாவது பதக்கம்’ என்றார் நிக்லஸ்.
அன்றிலிருந்து பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் 69, 75, 81 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குபற்றிவந்த இராணுவ குத்துச் சண்டை கழகத்தைச் சேர்ந்த நிக்லஸ் தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்த நிக்லஸ், இந்த வருடம் நடைபெற்ற கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தேர்வு போட்டியாகவும் கிளிபர்ட் கிண்ண குத்துச்சண்டை போட்டி அமைந்ததுடன் அதில் நிக்லஸ் வெளிப்படுத்திய ஆற்றல் அவருக்கு இயல்பாகவே பேர்மிங்ஹாம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
‘பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்தப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுகொடுப்பதே எனது இலட்சியம் ஆகும். அத்துடன் இன்னும் 2 வருடங்களில் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்கும் நோக்கத்துடன் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்’ என்றார் நிக்லஸ்.
கிளிநொச்சி, தர்மபுரம், புன்னைநீராவி நாதன் வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த நிக்லஸ், தற்போது இராணுவ குத்துச் சண்டை அணியில் இடம்பெறுகிறார்.
‘சிறுபராயத்திலிருந்தே குத்துச்சண்டையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் நான் யூ டியூப்களில் நிறைய குத்துச் சண்டைப் போட்டிகளைப் பார்த்து அவற்றின் மூலம் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். அத்துடன் உள்ளூர் பயிற்றுநர்கள் பலரிடம் பயிற்சிபெற்றதால் குத்துச்சண்டைக்கு தேவையான நுட்பத்துடன் கூடிய பல உபாயங்களையும் கற்றுக்கொண்டேன். இதன் காரணமாக குத்துச் சண்டை போட்டிகளில் எதிராளிகளை இலகுவாக வெற்றி கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இவை அனைத்தும் எனது குத்துச் சண்டை வாழ்க்கையில் திருப்பத்தையும் பெரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என நிக்லஸ் குறிப்பிட்டார்.
இலங்கையில் கிரிக்கெட் பிரபல்யமான போதிலும் தனது மாவட்டத்தில் பிரபல விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தப்படுவது குறைவு என சுட்டிக்காட்டிய அவர், ‘பாடசாலை மட்டத்திலிருந்தே குத்துச்சண்டையை அறிமுகப்படுத்தி இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவ் விளையாட்டு பிரபல்யம் அடைவதுடன் பல சிறந்த வீரர்களும் உருவாகுவார்கள்.
‘இளைஞர், யுவதிகள் மத்தியில் ஆற்றல், ஆர்வம், விடாமுயற்சி என்பன தாராளமாக இருக்கின்றது. அவற்றையெல்லாம் வெளிகொணர முறையான திட்டங்கள் அவசியம். நாடு முழுவதும் அடிக்கடி போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தினால் குத்துச் சண்டையில் வரலாறு படைக்கக் கூடியதாக இருக்கும்’ என சர்வதேச மட்டத்தில் சாதிக்க துடிக்கும் நிக்லஸ் கூறினார்.
கடந்த 6 வருடங்களாக உள்ளூர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி புகழீட்டிய நிக்லஸ் பங்குபற்றவுள்ள முதலாவது சர்வதேச போட்டி பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவாகும். அங்கு குத்துச்சண்டைப் போட்டியில் நிக்லஸ் பொதுநலவாய பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு புகழீட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெவுள்ள தொடக்க விழா வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50000 வீர, வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டு போட்டிகளில் 280 தங்கப் பதக்கங்களுக்காக போட்டியிடவுள்ளனர்.