வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, அமெரிக்கா, ‘இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட கொரியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான, வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை, சமீபத்தில், வெற்றிகரமாக நடத்தியது.
வட கொரியாவிலிருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பகுதியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது.
இது, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்ததால், வட கொரியாவின் நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர், டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, சீன அதிபர், ஜீ ஜிங் பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், வட கொரியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதை உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தார்.
ஐ.நா., உறுப்பு நாடுகள் அனைத்தும், ‘வட கொரியா மீது, கடும் பொருளாதார தடை விதிக்க வேண்டும்’ என, அழைப்பு விடுத்துள்ள டிரம்ப், வட கொரியா தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்து ள்ளார்,
இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அமெரிக்க துாதர், நிக்கி ஹாலே கூறியதாவது:
உலக நாடுகளை மிரட்டும் வகையிலான, வட கொரியாவின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை.
அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில், வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, வட கொரியாவுக்கு தக்க பதிலடி தர வேண்டும்.
அனைத்து நாடுகளும், அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்வது உட்பட, வட கொரியாவுடனான அனைத்து வகை வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். வட கொரியாவின் மிரட்டல்களுக்கு, அமெரிக்கா ஒருபோதும் அஞ்சாது.
வட கொரியாவின் இது போன்ற நடவடிக்கைகளால், போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது; அப்படி போர் ஏற்பட்டால், வட கொரியா முற்றிலும் அழியும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.