வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர்கள் சாட்சியம் அளித்தனர்.
அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை அனுமதித்து சிகிச்சை வழங்கிய வைத்திய அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு யாழ்.நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் மரண விசாரணை தொடர்பிலான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 02ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான் அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்.