கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் வடிவேலு. ஆனால் தன் வீட்டு நிகழ்ச்சிகளை மிக எளிமையான முறையில் நடத்துவது அவரது ஸ்டைல். நெருக்கமான உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஒருசிலர் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள். வடிவேலு வீட்டு நிகழ்வு என்றால் திரையுலகமே திரளும் ஆனாலும் அவர் யாரையும் அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துவார்.
வடிவேலுக்கு 3 மகள்கள், ஒரு மகன். இவர்களில் 2 மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் நடத்தி முடித்து விட்டார். தற்போது கடைசி மகளான கலைவாணிக்கு திருமணத்தை நேற்று நடத்தினார். கலைவாணி எம்பிஏ பட்டதாரி. இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்கிற ராம்குமாருக்கும், மதுரை ஐராவதநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகன் ராமலிங்கம் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் கம்பெனியில் பொறியாளராக இருக்கிறார்.
விழாவில் வழக்கம்போல நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வடிவேலுவின் நெருங்கிய நண்பரும், நடிகரும், அரசியல்வாதியுமான பூச்சி முருகன் மட்டுமே சென்னையிலிருந்து சென்று கலந்து கொண்டார்.