வட மாகாண முதலமைச்சர் அல்லது ஊழலுக்கு தொடர்புடைய நபர்களை பாதுகாப்பதற்கு தாம் ஒரு போதும் அனுமதிக்க போவதிலலை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வட மாகண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன கைச்சாத்திடவில்லை.
சிரேஷ்ட உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே, அவர் கைச்சாத்திடவில்லை என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவிய போது,
சில குற்றச்சாட்டு உள்ளவர்களை நீக்குவது குறித்து நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை. எனினும் கூறப்படும் இந்த விடயங்களுக்காக விக்னேஸ்வரன் நீக்கப்பட கூடாதென்றே நாங்கள் நம்புகின்றோம்.
இதற்கு முன்னர் வடமாகாண சபையினால், நாட்டின் சமாதானம், ஒற்றுமை மற்றும் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் வட மாகாண சபை உறுப்பினர் தர்மபால செனவிரத்ன மாத்திரமே அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபை அமைச்சர்களின் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, அந்த மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி இராஜினாமா செய்யுமாறு முதமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வடமாகாண சபையில் அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு முதல்வருக்கு ஆதரவான கருத்து ராஜபக்ஷர்களின் நிலைப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிளவுபட்டுள்ள உறுப்பினர்களால் புதிதாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.