வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனை வடக்கிலிருந்து அனுப்ப வேண்டும் என்று மாகாண அமைச்சர்களில் ஒருவர் ரணிலின் மூத்த ஆலோச கராக உள்ள தமிழர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு குற்றஞ்சாட்டினார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.வடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலரின் இடமாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதில் சுட்டிக்காட்டினார். இந்த இடமாற்றம் தொடர்பான பிரச்சினையை முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் சுமுகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உறுப்பினர் கே.சயந்தன் கருத்துத் தெரிவித்தார்.“வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கொழும்பு அரசு விரும்பி எடுக்கின்றதா?. அல்லது மாகாண அமைச்சுக்கு இவர் வேண்டாம் என அனுப்பப்படுகின்றாரா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனை வடக்கிலிருந்து அனுப்ப வேண்டும் என்று மாகாண அமைச்சர்களில் ஒருவர் தலைமை அமைச்சர் ரணிலின் மூத்த ஆலோசகராக உள்ள தமிழர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார் என்று தகவல் கிடைத்தது.மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றது. இவ்வறான நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோருவது பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றது. தர நிலைக்கு ஒப்பானவர் ஒருவர் நியமிக்கப்படுகின்றாரா அல்லது தமக்கு வேண்டியவர்கள் யாராவது நியமிக்கபடுகின்றார்களா என்பதை பார்க்கும் போதே உண்மை வெளியே வரும்.”- என்று அவர் கூறினார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
“வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு கடந்த வருடம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அவர் எமக்குத் தெரிவிக்காமல் எவரையோ பிடித்து இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி மூன்று மாதங்கள் கால அவகாசம் எடுத்துள்ளார். பின்னர் தேர்தல் காரணமாக அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. அதனாலேயே இப்போது அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் வடக்கிலேயே நீண்டகாலம் இருக்க வேண்டும் என்பதற்காக பல வேலைகளை செய்து வருகின்றார் போல தெரிகின்றது.” என்று அவர் கூறினார்.