வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதை நிறுத்து மாறு வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை மதியம் வரை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று பேரணியும் இடம்பெறவுள்ளதால் அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வடக்கு கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தவச்செல்வம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சமாச அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.அதில் அவர் தெரிவித்தாவது,வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதைத் தடுக்கக்கோரி பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனநாயக ரீதியாக எமது போராட்டத்தை விஸ்தரிக்கும் வகையில் நாளை திங்கட்கிழமை மதியம்வரை அனைத்து வர்த்தகர்களும் கடையைப் பூட்டி கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும்.
முச்சக்கர வண்டி சங்கம், கூட்டுறவுச் சங்கங்கள், வணிகர் கழகம் ஆகியனவும் எமக்கு ஆதரவு தரவேண்டும்.
எமது போராட்டத்தின்போது மருத்துவமனை மற்றும் பாடசாலைகள் வழமைபோல இயங்க நாம் கோருகின்றோம். மதியம்வரை கடைகளை மட்டும் பூட்டி எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம்.
அன்று பேரணியும் இடம்பெறும்.
அது எமது சமாச அலுவலகத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை அடைந்து மாவட்டச் செயலர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநருக்கு மனுக்களைக் கையளிக்கவுள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு வடக்கில் உள்ள 128 சங்கங்கள், 10 சமாசங்கள் ஆதரவு வழங்கியுள்ளன.
எமது தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நாமே போராடித் தீர்வு காணவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே நாளை எமது தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
எமது இந்த அகிம்சைப் போராட்டங்களுக்குத் தீர்வு கிடைக்காத பட்சத்தில், எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டதை நாம் வெளிநாட்டு தூதர்களுக்குத் தெரியப்படுத்தியதுபோல, எமது கடலும் அபகரிக்கப்பட்டு வருவதை தூதர்களுக்குச் சுட்டிக்காட்டி அவர்களுக்கு மனுக் கொடுக்கவுள்ளோம் – என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த வடமராட்சி சமாச தலைவர் வர்ணகுலசிங்கம் அரசியல்வாதிகளைக் குற்றஞ்சாட்டினார். அவர் தெரிவித்ததாவது:
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத கடலட்டை பிடித்தலைத் தடுக்க வலியுறுத்தி கடற்தொழில் சங்கங்களும் சமாசங்கலுமே போராட்டத்தில் ஈடுபட்டுவந்தன. இதற்குள் புகுந்த சில அரசியல்வாதிகள் போராட்டத்தைத் திசைதிருப்ப சதி செய்ய முற்படுகின்றனர்.
கடலடை்டைப் பிடித்தலைத் தடுக்குமாறு ஆரம்பத்தில் சமாசங்களும் கடற்தொழில் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தன. இதற்குள் புகுந்த சில அரசியல்வாதிகள் போராட்டங்களை மழுங்கடிக்கச் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே நாம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து நாடாளுமன்றுக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள் நாடாளுமன்றில் குரல்கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதுவிட்டால் அவர்கள் தமது பதவிகளைத் தூக்கி ஏறியவேண்டும்.
எமது ஜனநாயகப் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காதுவிட்டால் நாம் தொடர் போராட்டத்தில் களமிறங்கத் தீர்மானித்துள்ளோம் – என்றார்.