வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல, அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானதும் அல்ல என முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர ஆவேசம் வெளியிட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (15.09.2022) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல.
அனுமதி இல்லை
அந்த மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவையும் அல்ல. வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.

தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.