பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட நான்காம் கட்டப் போட்டிகளில் வட மாகாண அணியும் கிழக்கு மாகாண அணியும் இறுக்கமான வெற்றிகளை ஈட்டின.
மத்திய மாகாணத்துக்கும் வட மாகாணத்துக்கும் இடையில் பிற்பகல் நடைபெற்ற முதலாவது போட்டியில் வட மாகாணம் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்டியின் 69ஆவது நிமிடத்தில் தேசிய வீரர் மரியதாஸ் நிதர்ஷன் போட்ட கோல் வட மாகாணத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் ஜூட் சுபனின் கோர்னர் உதையை மத்திய மாகாண அணி கோல் காப்பாளர் அமித்த திசாநாயக்க தனது வலது முஷ்டியால் தட்டிவிட்டார். எனினும் பந்தைப் பெற்றுக்கொண்ட என். தயான்ஷன் அதை உயர்த்தி உதைக்க பந்தை நோக்கி ஓடிய நிதர்ஷன் தலையால் முட்டி கோல் போட்டார்.
இந்த சுற்றுப் போட்டியில் நிதர்ஷன் போட்ட 4ஆவது கோல் இதுவாகும்.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் வட மாகாண அணி 10 புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கின்றது.
இதேவேளை, மந்தமான மின் வெளிச்சத்தில் இரவு நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஊவா மாகாண அணியை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் கிழக்கு மாகாண அணி வெற்றி கொண்டது.
போட்டியின் ஆரம்ப கட்டத்திலேயே போடப்பட்ட கோல் கிழக்கு மாகாணத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ரிப்கான் மொஹமத் எரிந்த நீள்தூர ‘த்ரோ இன்’ பந்தை ஊவா மாகாண வீரர்கள் முறையாக தடுக்க தவறியதைப் பயன்படுத்திக்கொண்ட லைனுஸ் கான் மிகவும் சாதுரியமாக செயற்பட்டு ‘ஹாவ் வொலி’ உதை மூலம் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கிழக்கு மாகாணம் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.
இன்று இரண்டு போட்டிகள்
மேலும் இரண்டு போட்டிகள் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.
பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 1ஆவது போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியை மேல் மாகாண அணி எதிர்த்தாடவுள்ளது.
தொடர்ந்து மின்னொளியில் நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் தென் மாகாண அணியை ரஜரட்ட அணி (வட மத்திய மற்றும் வட மேல் மாகாண கூட்டு அணி) சந்திக்கவுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]