வட மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான சுதந்திர கிண்ண 2ஆம் கட்ட அரை இறுதி கால்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 1ஆம் கட்ட அரை இறுதிப் போட்டியில் கே. தேனுஷன் போட்ட கோலின் உதவியுடன் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வட மாகாணம் வெற்றிபெற்றிருந்தது.
இதுவரை தோல்வி அடையாத 2 அணிகளில் ஒன்றாகத் திகழும் வட மாகாணம் ஒரு கோல் அனுகூலத்துடன் கிழக்கு மாகாணத்துடனான போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் 1 – 0 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் வட மாகாணம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.
‘சொந்த மைதானத்தில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை எமது அணி தவறவிட்ட போதிலும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதிசெய்யும் குறிக்கோளுடன் சிறந்த வியகங்களை அமைத்து விளையாடவுள்ளோம்’ என வட மாகாண அணி பயிற்றுநர் ரட்ணம் ஜஸ்மின் தெரிவித்தார்.
‘எமது அணி திங்கட்கிழமை இரவுதான் மட்டக்களப்பை வந்தடைந்தது. எனினும் வீரர்கள் அனைவரும் திடகாத்திரமாகவும் சிறந்த மன உறுதியுடன் இருக்கின்றனர். அது எமக்கு மிகுந்த திருப்தியைத் தருகின்றது. இன்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் புகுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதே எமது நோக்கம்’ எனவும் அவர் கூறினார்.
வட மாகாண அணிக்கு எம். நிதர்ஷன், ஜூட் சுபன் ஆகிய இருவரும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இன்றைய போட்டியில் வட மாகாண அணிக்கு ஜூட் சுபன் தலைவராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, வட மாகாணத்துடனான போட்டியில் தனது முதலாவது தோல்வியைத் தழுவிய கிழக்கு மாகாண அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிக்கவுள்ளது.
எனினும் ஒரு கோல் பின்னிலையில் இருப்பதால் இன்றைய போட்டியில் கிழக்கு மாகாணம் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிவரும். மேலும் இறுதிப் போட்டி வாய்ப்பை பெறவேண்டுமானால் கிழக்கு மாகாணம் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
போதாக்குறைக்கு அதன் பிரதான முன்கள வீரர் எம். ரிப்கான், மத்திய கள வீரர் எம். பயாஸ் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகி இருப்பதால் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது கிழக்கு மாகாண அணிக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது அணியினால் வெற்றிபெற முடியும் என நம்புவதாக அணி பயிற்றுநர் எம்.எச். றூமி தெரிவித்தார்.
‘வீரர்கள் உபாதைக்குள்ளாவது சகஜம். இரண்டு பிரதான வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடாத போதிலும் அவர்களது இடங்களை நிரப்பக்கூடிய பல திறமைசாலிகள் எமது அணியில் இருக்கின்றனர். எனவே இன்றைய போட்டியில் முழுவீச்சில் விளையாடி கிழக்கு மாகாண இரசிகர்கள் முன்னிலையில் வெற்றிபெற முயற்சிப்போம்’ என றூமி தெரிவித்தார்.
முதல் கட்டப் போட்டியில் மத்தியஸ்தம் குறித்து திருப்தி அடைய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், எதிரணிக்கு மஞ்சள், சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் தமக்கு ஒரு பெனல்டி வழங்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் றூமி குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண அணியின் தலைவராக எம். முஷ்டாக் விளையாடவுள்ளார்.
வட மாகாண அணியிலும் கிழக்கு மாகாண அணியிலும் திறமைவாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறுவதால் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குழாம்கள்
வட மாகாணம்: ஜே. அமல்ராஜ், வீ. கீதன், எம். நிதர்சன், எஸ். ஜெயராஜ், ரி. கிளின்டன், எஸ். ஜேசுதாசன், எஸ். ஜூட் சுபன் (தலைவர்), என். தயான்ஷன், எம். பிரசாந்த், கே. தேனுஷன், ஏ. செபஸ்தி அருள், ஏ. டிலக்சன், ஜோய் நிதுசன், பி. சச்சின் லெம்பர்ட், ஆர். சாந்தன், பி. புவிதரன், ஜெ. ஜெரின்சன், வி. கஜந்தன், எவ். அனோஜன், எஸ். அஜய் ரீகன், வை. விக்னேஷ், ஜே. ஜெபநேசன் ரோச், ஏ. ஜே. ஜெரோம்.
கிழக்கு மாகாணம்: எம். வசீத், எம். ரினாஸ், எம். முபீஸ், பி. தஸ்லீம், எம். முஷ்தாக் (தலைவர்), மின்ரன் பெர்னாண்டோ, எம். முர்ஷித், எம். பஹாத், எம். முன்சிப், எம். இஹுஷான், ஏ. ஆபித், சஸ்னி மொஹமத், ஏ. டெலி, ஹஜிர் ஹனன், ஜே. ஜனந்த், எப். பௌசான், எம். ரிலா, எம். நிம்ரி, ஆர். அஹ்மத், ஐ. கான், எம். பைரூஸ்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]