வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி வடக்கில் தற்போது அதிகரித்துள்ள நுண்கடன் விவகாரம் தொடர்பிலும் ஆராய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போரின் பின்னர் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து காணப்படும் மக்களிடத்தில் ஆசை வார்த்தைகள் காட்டி நுண்கடன் என்னும் பெயரில் அதிக வட்டிக்குப் பணத்தை வழங்கி அதன் அறவீடுமுதல் அனைத்து விடயங்களா லும் பெரும் தொல்லைகள் ஏற்படுகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
குடும்பப் பிரிவு , தற்கொலை முயற்சி என்பவற்றுக்கும் இதுவே வழி ஏற்படுத்துகிறது என்று விமர்சிக்கப்படுகிறது. குறித்த கடன் முறைதொடர்பில் தினமும் செய்திகள் வெளிவரும் நிலையில் இது தொடர்பில் பலரும் சுட்டிக் காட்டினர்.
குறித்த விடயம் மத்திய வங்கியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் அடிப்படையில் இருநாள் பயணமாக இன்று வடக்கு மாகாணத்துக்கு வரும் மத்திய வங்கி ஆளுநரிடம் இந்த விடயங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது. இதற்காக கிராமத்தின் முக்கிய அமைப்புக்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை நாளை சந்தித்து அவர் கலந்துரையாட உள்ளார். இந்தக் கடன் முறையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கடன் வழங்கும் வழிமுறை, அதன் அறவீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் அவர் சிறப்புக் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.