யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த போட்டியில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அபரிமிதமாக பிரகாசித்த யாழ். மத்திய கல்லூரி வடக்கின் சமரில் தனது 29ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.
ஜெகதீஸ்வரன் விதுஷன், நிஷாந்தன் அஜய், மதீஸ்வரன் சன்சயன், கடைநிலை துடுப்பாட்ட வீரர் சுதர்ஷன் அனுஷாந்த் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்களும் ரஞ்சிதகுமார் நியூட்டன், ஆனந்தன் கஜன், விக்னேஸ்வரன் பருதி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு மேலும் 15 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்பு 138 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென் ஜோன்ஸ் கல்லூரி 160 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
அருள்சீலன் கவிஷான் 22 ஓட்டங்களுடனும் யோகதாஸ் விதுஷன் 12 ஓட்டங்களுடனும் கடைசி நாள் ஆட்டத்தை அழுத்தத்துக்கு மத்தியில் தொடர்ந்தனர்.
யோகதாஸ் விதுஷன் அதே எண்ணிக்கையில் ஆட்டமிழந்த போதிலும் கடைநிலை ஆட்டக்காரர்களுடன் இணைந்து கவிஷான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி சென் ஜோன்ஸின் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தார்.
அவர் கடைசியாக 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது யாழ். மாத்திய கல்லூரியின் வெற்றிக்கு 9 ஓட்டங்களே தேவைப்பட்டது.
பந்துவீச்சில் ரஞ்சிதகுமார் நியூட்டன் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் விக்னேஸ்வரன் பருதி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
9 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
எண்ணிக்கை சுருக்கம்
யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: 279 (நிஷாந்தன் அஜய் 74, ஜெகதீஸ்வரன் விதுஷன் 71, மதீஸ்வரன் சன்சயன் 42, சதுர்ஷன் அனுஷாந்த் 27, யோகதாஸ் விதுஷன் 70 – 4 விக்., அன்டன் அபிஷேக் 67 – 3 விக்., கிருபானந்தன் கஜகர்ணன் 38 – 2 விக்.)
சென் ஜோன்ஸ் 1ஆவது இன்: 127 (நேசகுமார் ஜெஸியல் 43, கமலபாலன் சபேசன் 34, ரஞ்சிதகுமார் நியூட்டன் 27 – 4 விக்., ஆனந்தன் கஜன் 8 – 3 விக்., சுதர்ஷன் அனுஷாந்த் 62 – 2 விக்.)
சென் ஜோன்ஸ் (ஃபலோ ஒன்) 2ஆவது இன்: 160 (அருள்சீலன் கவிஷான் 37, கமலபாலன் ஜனத்தன் 26, நேசகுமார் ஜெஸியல் 25, யோகதாஸ் விதுஷன் 12, ரஞ்சிதகுமார் நியூட்டன் 53 – 5 விக்., விக்னேஸ்வரன் பருதி 58 – 5 விக்.)
யாழ். மத்திய கல்லூர 2ஆவது இன்: 9 – 1 விக். (ஜெகதீஸ்வரன் விதுஷன் 5 ஆ.இ., மதீஸ்வரன் சன்சயன் 2 ஆ.இ., அன்டன் அபிஷேக் 5 – 1 விக்.)
ஆட்டநாயகன்: ரஞ்சித்குமார் நியூட்டன், சிறந்த துடுப்பாட்ட வீரர்: நிஷாந்தன் அஜய், சிறந்த பந்துவீச்சாளர்: விக்னேஸ்வரன் பருதி.