வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆசியப் பயணத்தின் போது, ‘‘அத்துமீறி ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவும், ஜப்பானும் இணைந்து இன்று (வியாழக்கிழமை) முதல் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க கடற்படை தரப்பில் கூறுகையில் ‘‘தொடர்ந்து 10 நாட்கள் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 14,000 அமெரிக்க வீரர்கள் கலந்து கொள்கின்றன, அமெரிக்காவின் ரோனால்ட் ரீகன், சேதாம், மஸ்டின் ஆகிய போர்க் கப்பல்கள் பங்கேற்கின்றன’’ எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தென் கொரிய பகுதியில் அமெரிக்காவும் அந் நாட்டு படைகளும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விதிமுறைகளை மீறி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 22 ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்தது. அவற்றில் 2 ஏவுகணைகள் ஜப்பானின் வான்வெளியில் ஏவி சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் அணுகுண்டை விட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சோதனை செய்தது.
மேலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.