நடிகர் சிம்பு நடிக்க, சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படம், கடந்த மாதம் வெளியாக இருந்தது. ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இருபெரும் படங்கள் ரிலீஸ் ஆனதால், அதோடு போட்டி போட வேண்டாம் என முடிவெடுத்து, இம்மாதம் முதல் தேதி ரிலீஸ் செய்ய, படக் குழு முடிவெடுத்தது.
அதையடுத்து, இப்படம் பிப்.,1 அன்று வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம், சென்னையில், முதல் நாளில் மட்டும், 43 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதையறிந்து, சிம்புவும் அவரது ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிம்பு ஏற்கனவே நடித்து வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படம், வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் வசூலைக் காட்டிலும் கூடுதலாக வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.