2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டத்துக்கான ஆசிய வலய தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் பங்கேற்கிறது.
ஆசிய வலயத்துக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை , தென்கொரியா, லெபனான், துர்க்மேனிஸ்தான், வட கொரியா ஆகியவற்றுடன் எச் குழுவில் அங்கம் வகிக்கின்றன.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா போட்டியிலிருந்து விலகிக்கொண்டது.
தென் கொரியாவின் சியோலில் நடைபெறும் தகுதிகாண் போட்டியில் விளையாடும் இலங்கை அணி இன்றையதினம் (05) இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு லெபனான் அணியை சந்திக்கிறது.
எதிர்வரும் 9 ஆம் திகதியன்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு பலம்பொருந்திய தென் கொரிய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கால்பந்தாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை அணி , பீபா தரவரிசையில் 202 ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.
இப்போட்டித் தொடரில் பலம் பொருந்திய தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு கோலையேனும் அடிப்பதை இலக்காக கொண்டு களமிறங்கவுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக சுஜான் பெரேரா தலைவராகவும், அஹமட் ராசிக் மற்றும் கவிந்து இஷான் ஆகிய இருவரும் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடியுரிமையைக் கொண்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களான மேர்வின் ஹெமில்டன், டிலான் செனத் டி சில்வா ஆகிய இருவரும் இலங்கை கால்பந்தாட்ட அணிக்காக விளையாடவுள்ளனர்.
இலங்கை கால்பந்தாட்ட குழாம் விபரம்
சுஜான் பெரேரா (அணித்தலைவர்),அஹமட் வசீம் ராசிக், கவிந்து இஷான், பிரபாத் ருவன் அருணசிறி, ஆர்.கே.தனுஷ்க, ஹர்ஷ பெர்னாண்டோ, ரொஷான் அப்புஹாமி, சமோத் டில்ஷான்,சரித்த ரத்னாயக்க,டக்சன் பஸ்லஸ்,சத்துரங்க மதுஷான்,மேர்வின் ஹெமில்டன், சலன சமீர, ஜூட் சுபன்,மொஹமட் முஸ்தாக்,மொஹமட் பசால்,டிலான் செனத் டி சில்வா, மொஹமட் ஆகிப்,அசிக்கர் ரஹுமான்,மொஹமட் அஸ்மீர்,சுப்புன் தனஞ்சய,ரிப்கான் மொஹமட், அமிர் அலைஜிக் (பயிற்றுநர்), ஆசிப் அன்சார் (அணி முகாமையாளர்)