லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் யூசுப் பதானின் அதிரடி துடுப்பாட்டத்தால் ஏஷியா லயன்ஸ் அணியை இந்தியா மஹராஜாஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
ஓமானின் மஸ்கட் நகரில் நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் 3 அணிகளில் விளையாடி வருகின்றனர்.
இதில் ஏஷியா லயன்ஸ், இந்தியா மஹராஜாஸ், வேர்ல்ட் ஜயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், 21 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டித் தொடரின் முதல் போட்டியில் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான ஏஷியா லயன்ஸ் அணியும் மொஹமட் கைப் தலைமையிலான இந்தியா மஹராஜாஸ் அணியும் மோதிக்கொண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய இந்தியா மஹராஜாஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஏஷியா லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் உப்புல் தரங்க 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவரைத் தவிர மிஸ்பா 44 ஓட்டங்களையும், கம்ரன் அக்மல் 215 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். ஆரம்ப வீரராக களமிறங்கிய திலகரட்ண டில்ஷான் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் மன்ப்ரீட் கோனி 3 விக்கெட்டுக்களையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்ததுடன், ஸ்டுவர்ட் பின்னி மற்றும் முனாப் பட்டேல் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.
வெற்றிக்காக 176 ஓட்டங்களை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா மஹராஜாஸ் அணி ஆரம்பம் சிறந்ததாக அமையவில்லை.
இந்நிலையில் அணித்தலைவர் மொஹமட் கைப்புடன் ஜோடி சேர்ந்த யூசுப் பதான் ஆடுகளத்துக்கு வந்ததிலிருந்து சிக்ஸர்கள், பெளண்டரிகளை விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய மஹராஜாஸ் அணி 19.1 ஓவர்களில் 179 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் யூசுப் பதான் 40 பந்துகளில் சிக்ஸர்கள் 9 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அவரைத் தவிர மொஹமட் கைப் மற்றும் இர்பான் பதான் ஆகிய இருவரும் முறையே 42, 21 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் சொய்ப் அக்தர் 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். உமர் குல் 2 ஓவர்களுக்கு 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரன் 4 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்றவில்லை.
போட்டியின் ஆட்ட நாயகனாக யூசுப் பதான் தெரிவானார்.
இதேவேளை, இன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் ஏஷியா லயன்ஸ் அணி வேர்ல்ட் ஜயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]