அறிமுக நடிகர் விஹான் ஜாலி கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லாக் டவுன் டைரி‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இதனை தமிழ் திரைப்பட மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. ராஜன் வெளியிட்டார்.
கன்னட திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘லாக் டவுன் டைரி’.
இதில் அவருடைய மகனும், நடிகருமான விஹான் ஜாலி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஹானா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் எம். எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், முத்துக்காளை, முன்னா, ‘கல்லூரி’ வினோத், துளசி, நேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே ஹெச் தாஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் மற்றும் ஏ.பி. முரளி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
லாக் டவுன் காலகட்டத்திய சம்பவங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அங்கீதா ப்ரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். முரளி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இவர்களுடன் தென்னிந்திய திரைப்பட சண்டை பயிற்சி இயக்குநர்களின் சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகளும், இயக்குநர்& வசனகர்த்தா லியாகத் அலிகான் உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஜாலி பாஸ்டியன் பேசுகையில், ” 900 திரைப்படங்களுக்கு மேல் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறேன். அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படத்தில் இயக்கி இருக்கிறேன்.
தற்போது இரண்டாவது படமாக ‘லாக்டவுன் டைரி’ என்ற படத்தை தமிழில் இயக்கியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் அடைந்த துன்பம் அனைவருக்கும் தெரியும்.
அந்த காலகட்டத்தில் ஒரு இளம் ஜோடி சிக்கிக் கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.