பிரித்தானியா தலைநகர் லண்டனில் Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 74 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தீ விபத்துக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.
கட்டிடத்தில் 2 அல்லது 3வது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட தீ குடியிருப்பு முழுவதும் பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் தான் கட்டிடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.
கட்டிடத்தின் வெளியே மரம், அலுமினியத்தால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளே தீ மளமளவென பரவியதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளில் லண்டனில் நடந்த மோசமான தீ விபத்து இதுவாகும்.
கட்டிடம் முழுவதும் சேதமடைந்து விட்டதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டது, எனவே அருகில் வசித்தவர்கள் வேறு இடங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1974ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டாலும், கடந்தாண்டு தான் பல மில்லியன் பவுண்ட் செலவில் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அலங்கார வேலைப்பாடுகளில் கவனம் செலுத்திய நிர்வாகம் பாதுகாப்பு பணிகளில் செலுத்தியிருந்தால் மாபெரும் விபத்தை தவிர்த்திருக்கலாம்.