லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு தள்ளியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தீவிரவாதிகள் வேனை வைத்து அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினர்.
அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், வேனில் இருந்து இறங்கி அருகே இருந்த Borough மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்கள் மீது தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.
இச்சம்பவத்தால் தற்போது வரை 8-பேர் பலியாகியுள்ளனர். 48-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றொருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மேலும் இறந்தவர்கள் தொடர்பான விவரங்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் லண்டன் பாலத்தில் தாக்குதலை ஏற்படுத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து, மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உடனடியாக அங்கு விரையும் பொலிசார் மூன்று தீவிரவாதிகளையும் காரில் விரட்டுகின்றனர். அவர்கள் அருகில் சென்றவுடன் பொலிசார் ஒருவர் காரில் இருந்து குதித்து குறித்த தீவிரவாதிகளை தாக்குகிறார்.
அதன் பின்னர் சுற்றி வளைத்த மற்ற பொலிசார் மூவரையும் சம்பவ இடத்திலே சுட்டு தள்ளி கொலை செய்கின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மூவர் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.
இத்தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பிரித்தானியாவில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.