லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகினர். 48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். அதில் 20-க்கும் மேற்பட்டோர் மோசமான நிலையில் உள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளை பொலிசார் சுட்டு கொன்றுவிட்டனர். மேலும் இதில் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, சந்தேகத்தின் அடிப்படையிலே தீவிரவாதிகளின் தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீவிரவாதிகளின் செய்தி ஊடகமாக கருதப்படும் Amaq News Agency ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் ஐஎஸ் அமைப்பினர் நேற்று லண்டனில் தாக்குதல் நடத்தினர். இதில் 7-பேர் பலியாகியுள்ளனர், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது கொண்டாட வேண்டிய தருணம். இங்கு இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைவாக அவர்கள் அங்கு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இப்போது தான் ஆரம்பம், ரம்ஜான் மாதம் தொடங்கி உள்ளதால் தாக்குதல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதற்கு முக்கிய காரணம் Love From Manchester என்ற வார்த்தை தான் எனவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு அமெரிக்காவுடன், பிரித்தானியா ஒன்று சேர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தவுள்ளது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட வாசகம் தான் Love From Manchester, பிரித்தானியாவிலிருந்து வெடிகுண்டுடன் சென்ற ஜெட் விமானத்தில் மேற்கண்ட வாசகம் இணையத்தில் வைரலானது.
இதனால் ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களை அழிப்பதற்கு அமெரிக்காவுடன், பிரித்தானியா ஒன்று சேர்ந்துள்ளதால், அதை எச்சரிப்பதற்காகவே இத்தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அவர்கள் திகதியை குறித்துவிட்டதாகவும், அதன் பின் திகதி மாறியதால் அவர்கள் திகதியை மாற்றியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.