லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின் தேசியக் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா பள்ளிவாசலில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம், பிரித்தானியாவில் உள்ள பலஸ்தீனிய மன்றம் ஒன்றினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அல் – அக்சாவை காப்பாற்று”, “பலஸ்தீனியர்களை விடுதலை செய்” மற்றும் “பயங்கரவாதிகளின் இருப்பிடமே இஸ்ரேல்” என எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பரித்துள்ளனர்.
கடந்த வாரம் முதல் இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனியர்களுக்கு இடையில் ஏற்பட்டு வரும் மோதல்கள் காரணமாக சுமார் 390 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.