லண்டனின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்
லண்டனில் நேற்றும் நேற்று முன்தினமும் பெய்த கடுமையான மழையினால் பல பகுதிகளில் திடீரென மழைவெள்ளம் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். நேற்றையதினம் மாலை 4 மணியளவில் பெய்த கடுமையான மழையினால் நோர்த் ஹரோ ரயில் நிலையத்துக்கு முன்பாகச் செல்லும் வீதியில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது.
இந்த திடீர் வெள்ளத்தால் வீதிப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.
மேலும் நோர்த் ஹரோ ரயில் நிலையத்தில் இருந்து மக்கள் வெளியேறமுடியாது தவித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்துக்கு விரைந்து பயணிகளை மீட்டனர்.
அதேவேளை ரயில் நிலையத்துக்கு முன்பாக பயணித்த கார்கள் கிட்டத்தட்ட முழுமையாக மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காரில் இருந்து மூன்று குழந்தைகள் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணியளவில் நோர்த் ஹரோ ரயில் நிலையமும் அதன் முகப்பு வீதியும் மூடப்பட்டதனால் ஹரோ நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.