தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லஞ்சம் தர மறுத்ததால் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்கை போலீசார் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டைக் கிளப்பி டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வீரவாஞ்சிநகரைச் சேர்ந்தவர் வேல்சாமி. தள்ளுவண்டியில் பழ வியாபாரம் நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் சதீஷ் என்பவர் இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் படிக்கிறார். கடந்த ஜனவரி 1-ம் தேதி இதே வீரவாஞ்சி நகர் பகுதியில் சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் கேக் வெட்டி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் போது இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக அந்த வீட்டின் உரிமையாளர் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில் போலீசார் அப்பகுதியில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சதீஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திவிட்டு, சதீஷின் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை எடுத்துச் சென்றுள்ளனர் போலீசார்.
இதனைத் தொடர்ந்து, காவல்நிலைத்தில் வேல்சாமி பைக்கை கேட்டதற்கு, “நீதிமன்றத்தில் வந்து உரிய ஆவணங்களைக்காட்டி பைக்கை எடுத்துக் கொள்ளலாம்.” என போலீசார் கூறினாராம்.
ஆனால், மறுநாள் நீதிமன்றத்திற்கு பைக் கொண்டு வராததால் மீண்டும் காவல்நிலையத்தில் வேல்சாமி மீண்டும் கேட்டபோது, காவல்துறையினர் எவ்வித பதிலும் சொல்லவில்லையாம். இந்நிலையில் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் காட்டுப்பகுதியில் அநாதையாக கிடந்ததாக மாணவன் சதிஷின் பைக்கினை போலீசார் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பைக் என்ஜீன் எண், பைக்கின் முக்கிய பாகங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, பைக்கினை பயன்படுத்த முடியதாத நிலையில் இருப்பதை கண்ட வேல்சாமி மற்றும் அவரது உறவினர்கள் கோவில்பட்டி டி.எஸ்.பி. அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எவ்வித தவறும் செய்யாத மகனின் பைக்கினை எடுத்து வந்து, பணம் பறிக்கும் பைக்கை நோக்கில் தரமால், நீதிமன்றத்தில் ஒப்படைக்காமலும், பைக்கினை சேதப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதையடுத்து முற்றிலுமாக சேதமடைந்த பைக் சதிஷின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்புகாரால் டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகையிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.